கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மக்களவை தேர்தலானது ஜுன் 1ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த தேர்தலில் 31.2 கோடி பெண் வாக்காளர்கள் உட்பட, 64.2 கோடி வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர்.
இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில், பல திருப்பங்கள் அரங்கேறியுள்ளன. 290 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக மட்டும் 242 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லை: இந்தியா கூட்டணி 235 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் மட்டும் 99 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டுமானால் 272 எம்பிக்களின் ஆதரவு தேவை. ஆனால், இன்னும் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட முடிவுகள் தெரிந்துவிட்டது என்றே சொல்லலாம்.
எனவே, நொடிக்கு நொடி எதிர்பாராத அரசியல் திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த தேர்தலில் பல எதிர்பாராத சம்பவங்கள் நடந்துள்ளன. உத்தர பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இந்தியா கூட்டணி சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது.
இதை தவிர்த்து தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. இருப்பினும், இந்தியா கூட்டணி பெரும்பான்மையை பெற முடியாமல் போனதற்கு மூன்று மாநிலங்கள் முக்கிய காரணமாக அமைந்துள்ளன. அது, எந்தெந்த மாநிலங்கள் என்பதை இப்போது பார்ப்போம்.
பீகார்: அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களில் ஒன்றாக உள்ள பீகாரில் 40 மக்களவை தொகுதிகள் உள்ளன. லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், பாஜக, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை பீகாரின் பிரதான கட்சிகளாக உள்ளன.
தற்போது, நிதிஷ் குமார் முதலமைச்சராக உள்ளார். இந்தியா கூட்டணியை கட்டமைப்பதில் இவரே முக்கிய பங்காற்றினார். ஆனால், பின்னர், பல காரணங்களை காரணம் காட்டி கூட்டணியில் இருந்து விலகினார். பாஜக, ராஷ்டிரிய ஜனதா தளம் என பல முறை மாறி மாறி கூட்டணி வைத்துள்ளார்.
இந்த தேர்தலில் பாஜக 12 தொகுதிகளிலும் ஐக்கிய ஜனதா தளம் 12 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ராஷ்டிரிய ஜனதா தளம் 4 தொகுதிகளிலும் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் நிதிஷ் குமாரின் ஆதரவு ஆட்சி அமைக்க மிக முக்கியம். இந்தியா கூட்டணி சார்பில் அவரை தொடர்பு கொண்டுள்ளதாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவர் என்ன செய்ய போகிறார் என்பதை பார்க்க நாடே காத்திருக்கிறது.
கர்நாடகா: தென்னிந்தியாவில் பாஜக ஆட்சி செய்த ஒரே மாநிலம். இங்கு 28 மக்களவை தொகுதிகள் உள்ளன. காங்கிரஸ் ஆட்சி செய்து வரும் மாநிலமாக இருந்த போதிலும் 19 தொகுதிகளில் பின்னடைவை சந்தித்து வருகிறது. 9 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போனதற்கு கர்நாடகாவும் முக்கிய காரணம். இங்கு காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றும் என எதிர்ப்பார்த்த நிலையில் திடீர் திருப்பமாக சரிவை சந்தித்துள்ளது.
ஒடிசா: கலாசார ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் முக்கிய மாநிலங்களில் ஒன்று. இங்கு 21 மக்களவை தொகுதிகள் உள்ளன. மக்களவை தேர்தலுடன் ஒடிசாவுக்கு சட்டப்பேரவை தேர்தலும் நடத்தப்பட்டது. இரண்டிலும் பாஜக மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.
வரலாற்றில் முதல்முறையாக ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. அதேபோல, மக்களவை தேர்தலில் 19 இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போனதற்கு ஒடிசாவும் ஒரு காரணம்.