நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கருத்துக்கணிப்புகளுக்கு நேர் மாறாக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. 295 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.


காலிஷ்தானி ஆதரவாளர் அம்ரித் பால் சிங் வெற்றி: பாஜக மட்டும் 242 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 231 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் மட்டும் 99 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டுமானால் 272 எம்பிக்களின் ஆதரவு தேவை.


ஆனால், இன்னும் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, நொடிக்கு நொடி எதிர்பாராத அரசியல் திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. தேசிய அளவில் மட்டும் இல்லாமல் பிராந்திய அளவிலும் தேர்தல் முடிவுகளில் பல திருப்பங்கள் நடந்துள்ளன.


தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அஸ்ஸாம் மாநிலம் திப்ருகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காலிஷ்தானி ஆதரவாளர் அம்ரித் பால் சிங் கதூர் சாஹிப் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். சுயேட்சையாக போட்டியிட்ட அவர் 3 லட்சத்து 47 ஆயிரத்து 667 வாக்குகள் பெற்றுள்ளார்.


அம்ரித் பால் சிங்கை எதிர்த்து களம் கண்ட காங்கிரஸ் கட்சியின் குல்பீர் சிங் ஜிரா, 1 லட்சத்து 88 ஆயிரத்து 568 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் லால்ஜித் சிங் புல்லர் 1 லட்சத்து 77 ஆயிரத்து 502 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.


பஞ்சாப் மக்களவை தேர்தல் முடிவுகள்: பஞ்சாபில் மொத்தம் 13 மக்களவை தொகுதிகள் உள்ளன. அதில், காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 3 தொகுதிகளிலும் சிரோமணி அகாலி தளம் 1 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகிறது. அம்ரித் பால் சிங் உள்பட 2 சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.


சீக்கியர்களுக்கு தனி தேசம் உருவாக்க வேண்டும் என தொடர் கோரிக்கை விடுத்து வந்தவர் காலிஸ்தானின் தீவிர ஆதரவாளரான அம்ரித் பால் சிங். வாரிஸ் பஞ்சாப் டி என்ற இயக்கத்தின் தலைவராக உள்ளார். கைது செய்யப்பட்ட தனது ஆதரவாளரை விடுவிக்க வலியுறுத்தி காவல்நிலையத்தில் ஆயுதங்களுடன் புகுந்ததால் அம்ரித் பால் சிங்கை கைது செய்ய பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


அவரிடம் பேசியதாக கூறி பலநூறு அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தாலும் அப்பாவி இளைஞர்களை கைது செய்து துன்புறுத்தியதாக பல கிராமங்களில் மத்திய அரசின் மீது கடும் கோபத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.  


இதையும் படிக்க: TN Lok Sabha Election Results 2024 LIVE: நாற்பதும் நமதே என்ற திமுக; தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக கூட்டணிக்கு 0 தொகுதிகள்!