கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் பணிகளில் அந்த மாநில ஆளுங்கட்சியான பா.ஜ.க.வும், எதிர்க்கட்சியான காங்கிரசும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தின் சிவமோகா நகரில் பா.ஜ.க. சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
பாதியில் நிறுத்தப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து:
இந்த கூட்டத்தில் முன்னாள் துணை முதலமைச்சர் ஈஸ்வரப்பா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் பங்கேற்றிருந்தர். அந்த பகுதியில் தமிழர்கள் அதிகம் வசிப்பதால் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது, திடீரென ஈஸ்வரப்பா தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியிலே நிறுத்தச் சொன்னார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அண்ணாமலைக்கு கடும் கண்டனங்கள் குவிந்தது. இந்த நிலையில், இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி தி.மு.க. எம்.பி. கனிமொழி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்தும் தனது கட்சிக்காரர்களைத் தடுக்க முடியாத அண்ணாமலை தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப்படுவார்” என்று பதிவிட்டிருந்தார்.
அடித்துக் கொண்டு புரளவா?
அவரது பதிவிற்கு அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது “அடித்துக் கொண்டு புரள அது தி.மு.க. மேடை இல்லை சகோதரி கனிமொழி. ஒவ்வொரு மாநிலத்தின் மாநில கீதம் பாடிய பிறகுதான் வேறு மாநிலத்தின் வாழ்த்து பாடல் இசைக்கப்படும் என்பது நியதி. அந்த நியதியைத்தான் கர்நாடக மாநில முன்னாள் துணை முதலமைச்சர் ஈஸ்வரப்பா சுட்டிக்காட்டினார்.
நமது தேசிய கொடியை ஏற்றிய பின் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்று தெரியாத ஒரு தலைவரை வைத்துக்கொண்டு இதெல்லாம் உங்களுக்கு தேவையா? கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் என்ற வரியை தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் இருந்து நீக்கி மாநில பிரிவினையை விதைத்த சரித்திரம் அல்லவா உங்களது? தமிழ் மக்களை உங்களிடமிருந்தும் தி.மு.க.வினரின் மலிவான அரசியலில் இருந்தும் காப்பாற்றுவதே எங்கள் ஒரே பணி. கவலை வேண்டாம்.”
என்று பதிவிட்டுள்ளார்.
அண்ணாமலைக்கு கண்டனம்:
மேலும், அண்ணாமலை ஒரு செய்தி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. காவல்துறையில் அளித்த புகாரில், தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தேசிய கீதம் இசைக்காமல் தேசிய கொடியை ஏற்றி வைத்ததாக புகார் அளித்திருந்த செய்தி வீடியோ உள்ளது. இந்த வீடியோவை சுட்டிக்காட்டியும் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்த பாதியிலே நிறுத்தப்பட்டது தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது அதில் அண்ணாமலையும் பங்கேற்றிருந்ததால், அபாலஜிஸ் அண்ணாமலை என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது. மேலும், அண்ணாமலையின் இந்த பதிவிற்கு கீழ் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: Ponniyin Selvan 2 LIVE: ரிலீசானது பொன்னியின் செல்வன் 2 ... கொண்டாடும் ரசிகர்கள்.. அப்டேட்டுகள் உடனுக்குடன்..!
மேலும் படிக்க: Ponniyin Selvan 2 Twitter Review: நாவல் முழுமை பெற்றதா? .. பொன்னியின் செல்வன்-2 ரசிகர்களை கவர்ந்ததா? .. ட்விட்டர் விமர்சனம் இதோ..!