கர்நாடகாவில் உயிரிழந்த ராணுவ வீரரின் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க சென்ற சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்  துறை அமைச்சர் ஏ.நாராயணசாமி, எதிர்பாராவிதமாக வீடு மாறி வேறு ஒரு ராணுவ வீரரின் வீட்டுக்கு சென்றது குடும்பத்தினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.



கர்நாடகாவை சேர்ந்த ஒன்றிய அமைச்சர் நாராயானசாமி புதிய சர்ச்சையில் சிக்கினார். இறந்த ராணுவ வீரரின் வீட்டுக்கு பதில் உயிரோடு உள்ள வீரரின் வீட்டுக்கு சென்ற அமைச்சர் ஏ.நாராயணசாமி, வீட்டாரிடம் சென்று குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் நிலமும் அரசு சார்பில் வழங்கப்படும் என்று கூறி ஆறுதல் சொல்ல, தன் மகன் இறந்துவிட்டதாக எண்ணி குடும்பத்தார் குழப்பத்துக்குள்ளாகினர். பின்பு நடந்த குழப்பத்தை உணர்ந்த அமைச்சர் ஏற்பட்ட குழப்பத்தை சரிசெய்து விட்டு அங்கிருந்து கிளம்பினார்.


கர்நாடகாவின் கடாக் மாவட்டத்தின் முல்குந்தில் இறந்த ராணுவ வீரரின் வீட்டுக்கு சென்று இரங்கல் தெரிவிப்பதற்காக ஒன்றிய அமைச்சர் ஏ.நாராயணசாமி சென்றிருந்தார்.நிறைய இடங்களுக்கு செல்லவேண்டிய வேலைகளுடன், ஹவேரி பாஜக எம்.பி. சிவகுமார் உதாசியுடன் முல்குந்தை அவசரத்தில் சென்றடைந்தார். அங்கு சென்ற அமைச்சர் எதிர்பாராவிதமாக தற்போது பணியில் இருக்கும் ராணுவ வீரர் ரவிக்குமார் கட்டிமணியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.


ஜம்மு காஷ்மீரில் பணியில் உள்ள ரவிக்குமார் வீட்டின் உள்ளே சென்று வீட்டில் இருப்பவர்களின் உடல்நலம் விசாரித்திருக்கிறார். வீட்டிக்குள் திடீரென அமைச்சர் வந்ததன் அதிசயித்து இருந்த குடும்பத்தினர் அவருக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தனர். அதனை தொடர்ந்து குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை பெற்றுத்தருவதாகவும், குடும்பத்திற்கு நிலம் பெற்று தருவதாகவும் வாக்கு தந்தது அதிர்ந்து போன குடும்பத்தினர் குழப்பத்துக்குள்ளாகினர்.



ஒருவழியாக குழப்பம் தெளிந்த பின்பு குடும்பத்தை அறிந்த பிஜேபி கட்சிக்காரர் ஒருவர் ரவிக்குமார் கட்டிமணிக்கு வீடியோ கால் செய்து கொடுத்தார். அவருடன் பேசிய அமைச்சர் ஏ.நாராயணசாமி குழப்பத்தை தெளிவுபடுத்தினார். செய்த தவறை பூசி மொழுகுவதற்காக ராணுவ வீரர்களின் அற்பணிப்பை பற்றியும் குடும்பதினரை பற்றியும் சில வார்த்தைகள் புகழ்ந்து பேசிவிட்டு விடைபெற்றார்.


"என் கணவர் காஷ்மீரில் வேலை செய்கிறார், எங்களுக்கு திருமணம் ஆகி இரண்டு மாதங்கள் ஆகிறது. அமைச்சர் எங்கள் வீட்டிற்கு வந்து எங்களைப் பற்றி விசாரித்தது குழப்பத்தை ஏற்படுத்தியது, ஆனால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலையும், நிலமும் தருவதாக சொன்னபோது, என் கணவர் ஊரில் இருக்கிறார் அவரிடம் கேட்க வேண்டும். அதன் பிறகுதான் குழப்பம் ஒரு முடிவுக்கு வந்தது" என்று கட்டிமணியின் மனைவி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.