சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்கள் வெற்றி பெறும் தொகுதிகளுக்குரிய மாவட்ட பா.ஜ.க. தலைவர்களுக்கு கார் பரிசளிக்கப்படும் என்று அப்போதைய தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார். இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் 4 பா.ஜ.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்றுள்ளதால், அந்த மாவட்டத் தலைவர்களுக்கு கார் பரிசளிக்கப்பட உள்ளது. இதற்காக தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு நான்கு புதிய டொயோட்டா இன்னோவா கார்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னை, தி.நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர்களுக்கு இந்த கார்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது. மதியம் 2 மணியளவில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் நகர், ஈரோடு தெற்கு ஆகிய மாவட்ட தலைவர்கள் புதிய கார்களை பரிசாக பெற உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் , மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்று மாவட்ட தலைவர்களுக்கு கார்களை பரிசாக வழங்க உள்ளார். மேலும், இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, முன்னாள் மாநில தலைவரும், எம்.பி.யுமான இல.கணேசன், எச்.ராஜா மற்றும் முக்கிய தலைவர்களும், நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக, தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க. போட்டியிட்டது. இந்த தேர்தலில், தி.மு.க. தலைமையிலான கூட்டணி 10 ஆண்டுகளுக்கு பிறகு மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆளுங்கட்சியான அ.தி.மு.க. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது.
தமிழகத்தில் 20 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க. 4 இடங்களில் வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்தது. பா.ஜ.க. சார்பில் கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசனும், நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரனும், நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர்.காந்தியும், மொடக்குறிச்சி தொகுதியில் சரஸ்வதியும் வெற்றி பெற்றனர். அக்கட்சியின் முக்கிய வேட்பாளர்களாக கருதப்பட்ட கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, நடிகை குஷ்பு, எச்.ராஜா ஆகியோர் தோல்வியை தழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது.