மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவர், தன்னிடம் பெட்ரோல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரிடம் தலிபான்களால் ஆட்சி செய்யப்படும் ஆப்கானிஸ்தானுக்குப் போகுமாறு கூறியுள்ளது அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் கட்னி மாவட்டத்தின் பாஜக தலைவர் ராம்ரதன் பாயல், நாட்டைக் கொரோனா மூன்றாவது அலை தாக்கப் போகும் சூழலில், பெட்ரோல் விலை உயர்வு குறித்து ஏன் கேள்வி கேட்கப்படுகின்றன என்றும் அவர் நொந்துகொண்டார்.
எனினும், இதனைப் பேசிய போது, அவரும், அவரைச் சுற்றியிருந்த அவரது ஆதரவாளர்கள் யாரும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல், முகக் கவசம் அணியாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், பத்திரிகையாளர் ஒருவர் ராம்ரதன் பாயலிடம் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் முதலான எரிபொருள் விலை உயர்வு குறித்த கேள்வியைக் கேட்கும் போது, சற்றே கோபம் அடையும் ராம்ரத்தன் பாயல், “தலிபான்களிடம் இருந்து எடுத்துக் கொள்ளுங்கள். ஆப்கானிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 ரூபாய் தான். ஆனால் அதனைப் பயன்படுத்த அங்கு யாரும் இல்லை. அங்கு போய் பெட்ரோலை நிரப்பிக் கொள்ளுங்கள். இங்கே உயிர் வாழ்வதற்குப் பாதுகாப்பான சூழலாவது நிலவுகிறது” என்று கூறியுள்ளார்.
விலைவாசி உயர்வு குறித்து மேலும் கேள்விகள் எழுப்பப்பட, “நாட்டைக் கொரோனா மூன்றாவது அலை தாக்கப் போகிறது. நாடு எதை எதிர்கொண்டிருக்கிறது என்பது குறித்து அக்கறை கொள்ளாமல், பெட்ரோல் விலை குறித்து கேள்வி கேட்கிறீர்கள்” என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை அனைத்து மாநிலங்களிலும் லிட்டருக்கு 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் டீசல் விலை லிட்டருக்கு சுமார் 90 ரூபாயை எட்டியுள்ளது. தற்போது நடந்துமுடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, எகிறும் பெட்ரோல், டீசல் விலை முதலானவை குறித்து எதிர்க்கட்சிகள் விவாதம் கோரியபோது, நாடாளுமன்றத்திற்குள் அமளி எழுந்தது.
மேலும், இந்திய மக்களை ஆப்கானிஸ்தானுக்குச் செல்ல அறிவுரை கூறிய மற்றொரு பாஜக தலைவரும் இருக்கிறார். பீகார் மாநிலத்தின் பிஸ்ஃபி சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏவும், பாஜகவைச் சேர்ந்தவருமான ஹரிபூஷன் தாக்கூர், இந்தியாவில் வாழ்வதற்கு அச்சம் கொள்பவர்கள் ஆப்கானிஸ்தானுக்குச் செல்லலாம் எனவும், அங்கு பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பது இந்தியாவுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறியுள்ள அவர், இந்தியாவில் வாழ அச்சப்படுபவர்கள் அங்கு செல்லலாம் எனவும், அப்போதாவது இந்தியாவின் மதிப்பை உணர்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.