முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து நீதியரசர் ஆறுமுகசாமி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் முன்னாள் முதல்வர் கருணாநிதியை ஒரு இடத்தில் குறிப்பிட்டுள்ளார். அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம். 


அறிக்கை பேரவையில் தாக்கல்


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை இன்று (அக்டோபர் 18) சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.


மறைந்த முதல்வர் உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், ஹைப்போ தைராய்டிசம், நாள்பட்ட வயிற்றுப்போக்குடன் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (Irritable Bowel Syndrome with Chronic Diarrhoea) மற்றும் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி (Chronic Seasonal Bronchitis) ஆகியவற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தார் என்பது ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்ததிலிருந்து அறியப்படுகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


அத்துடன் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்ட ஆறுமுக சாமி ஆணையம் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது. அது தன் விசாரணை அறிக்கையின் இறுதியில் மறைந்த முதல்வரின் உடல்நலக்குறைவு மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்தத் தவறியதால் இது விசாரிக்கப்பட வேண்டியதாக ஆணையம் கருதுகிறது என்று கூறியுள்ளது.






ஜெ. மரண அறிக்கையில் கருணாநிதி


அத்துடன், திருக்குறளில் உள்ள மருந்து என்ற அதிகாரத்தில் உள்ள 948வது திருக்குறளான


“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்


வாய்நாடி வாய்ப்பச் செயல்”


என்பதை இந்த ஆணையம் மேற்கோள் காட்டியுள்ளது. இத்திருக்குறளுக்கு கலைஞர் எழுதிய உரையில் இருந்து பொருளை விளக்கியுள்ளது. அதில், நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும். உடல் நோய்க்கு மட்டுமின்றி சமுதாய நோய்க்கும் இது பொருந்தும் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.


மேலும்,


’’காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா


வேலாள் முகத்த களிறு’’


என்ற 50வது அதிகாரம், இடனறிதலில் இடம்பெற்றுள்ள 500வது திருக்குறளையும் ஆறுமுகசாமி ஆணையம் மேற்கோள்காட்டியுள்ளது. இக்குறளுக்கு, வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும் கால் ஆழ சேற்று நிலத்தில் அகப்பட்டபோது நரிகள் கொன்றுவிடும் என்ற டாக்டர் மு.வரதராசனாரின் விளக்கத்தையும் குறிப்பிட்டுள்ளது.