சட்டமன்றத்தில் ஜெயலலிதா தாக்கப்பட்ட சம்பவத்தில் எனது தந்தை கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது முதலமைச்சரின் கருத்து வருத்தம் அளிக்கிறது என்று தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி அளித்துள்ளார்.
தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி ( Tamilisai Soundararajan )
சென்னை ( Chennai News ) : சென்னை விமான நிலையத்தில் தெலுங்கானா கவர்னரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ஜெயலலிதா தாக்கப்பட்டது உண்மை:
பாராளுமன்றத்தில் ஜெயலலிதா பற்றி மந்திரி நிர்மலா சீத்தாராமன் பேசியதுபோல ஒரு நிகழ்வு நடக்கவில்லை. வாட்ஸ் ஆப்பை பார்த்து பேசி இருப்பார் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறி உள்ளார். மறைந்த பெண் தலைவர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தாக்கப்பட்ட சம்பவம் உண்மை. கொடூரமாக தாக்க வந்த போது கிழிந்த உடையுடன் சட்டமன்றத்தில் இருந்து வெளியே வந்தது உண்மை. மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் சட்டமன்றத்தில் நடந்த மோசமான நிகழ்வை எடுத்து சொன்னதை தமிழக சரித்திரம் மறைக்கப்படும் அளவிற்கு இலகுவாக சொல்லி உள்ளார்.
எனது தந்தையின் கையில் எலும்பு முறிவு
அப்போது மூப்பனார் எதிர்கட்சி தலைவர், எனது தந்தை குமரி ஆனந்தன் துணை தலைவர். இந்த சம்பவத்திற்கு நானே சாட்சி. சட்டமன்றத்தில் புத்தகங்கள் பறந்தன. போடியம் பறந்தன. இதில் எனது தந்தையின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கட்டுடன் சென்ற போது பொய் கட்டு என சொன்ன போது எக்ஸ்ரேவை காட்டிய நிகழ்வுகள் நினைவு வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வு துர்திஷ்டவசமானது. கவலை அளித்து வருத்தப்பட்ட நிகழ்வு. ஆனால் நடக்கவே இல்லை என சொல்லும் போது வருத்தமாக உள்ளது. முதலமைச்சர் ஏன் அப்படி சொன்னார் என்று தெரியவில்லை.
சட்டமன்றத்தில் அப்படிப்பட்ட நிகழ்வு நடக்கவே இல்லை
இந்த கருத்து தவறாக சென்று விடக்கூடாது என்பதற்காக மறுப்பு தெரிவிக்கிறேன். புத்தகம், போடியம் பறந்த போது மற்றவர்கள் மீது பட்டு விடக்கூடாது என்பதற்காக தடுத்த போது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் இதற்காக நிறைய நாள் கட்டுடன் இருந்தார் என்பது உண்மை. எங்கள் வீட்டில் பாதிக்கப்பட்ட போது சட்டமன்றத்தில் அப்படிப்பட்ட நிகழ்வு நடக்கவே இல்லை என்று சொல்லும் போது வருத்தமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்..