பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண் பார்வையிலே வைத்துக்கொள்ள வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள்.

 

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை

 

காஞ்சிபுரம் ( kanchipuram child missing ) : காஞ்சிபுரம் அடுத்த வெங்கச்சேரி இருளர் காளனியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் மனைவி காமாட்சி பிரசவத்திற்காக காஞ்சிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் பார்வையாளர் கூடத்தில் இருந்த மூர்த்தியின்  3 வயது குழந்தை சக்திவேல், மற்றும்  அவரது அண்ணன் ஏழுமலையின் 6 வயது மகள் சௌந்தர்யா ஆகிய இரு குழந்தைகளும் மருத்துவமனையில் இருந்து திடீரென மாயமானார்கள்.


இது குறித்து மூர்த்தி, ஏழுமலை ஆகியோர் குழந்தைகள் காணவில்லை என விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் விஷ்ணு காஞ்சி போலீசார் காணாமல் போன குழந்தைகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இரு குழந்தைகளையும் பெண் ஒருவர் ரயில்வே சாலை வழியாக அழைத்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

 


 

சிசிடிவி காட்சி..

 

சிசிடிவி காட்சியில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் இரு குழந்தைகளையும் அழைத்து செல்வது போல் உள்ளது. அந்த பெண் கடந்த இரு தினங்களாக மருத்துவமனையில் இருந்து அந்த குழந்தைகளிடம் நன்றாக பழகி வந்ததாக மருத்துவமனையில் இருந்தவர்கள் தெரிவித்து தான் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

 

தொடர்ந்து தேடுதல் வேட்டை

 

மேலும் காணாமல் போன இரு குழந்தைகளையும் கண்டுபிடிக்கும் பணியில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில், பதிவான சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் படிப்படியாக ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளைப் பெண் அழைத்துச் சென்ற வழியை, காவல்துறையினர் தொடர்ந்து கண்டறிந்து கொண்டு வந்தனர்.

 


குழந்தைகள் மீட்பு:

 

அதன் பிறகு வாலாஜாபாத் பகுதியில் அந்தப் பெண் சென்ற கடைசி சிசிடிவி காட்சி கிடைத்தவுடன், அந்த சுற்றுவட்டார பகுதியில் தான் பெண் குழந்தைகளை பதுக்கி வைத்திருக்க வேண்டும் என தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். சுற்றுவட்டாரத்தில் இருந்த பல்வேறு கிராம பகுதிகளிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் வாலாஜாபாத் தடுத்துள்ள அஞ்சூர் என்ற கிராமத்தில் குழந்தைகள் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அப்பகுதியில் குழந்தைகளை வைத்திருந்த ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



 

சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்ற காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், குழந்தைகளிடம் விசாரணை மேற்கொண்டார். அப்பொழுது காணாமல் போன சிறுமி," சாப்பாடு வாங்கித் தருவதாக அந்த பெண் கூறியதால் சென்றதாகவும், தனது தாயார் கூட அந்தப் பெண்ணுடன் இருக்குமாறு கூறியதாக குழந்தை தெரிவித்தது " . இதன் அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், இனி  பெற்றோர்கள் இல்லாமல் யாருடனும் செல்லக்கூடாது, எனக் கூறி அறிவுறுத்தல் கொடுத்தார். குழந்தைகளை கூட்டிச் சென்ற பெண்ணை காவல் துறை தொடர்ந்து தேடி வருகின்றனர்.