அதிமுகவை தனது குடும்பம் என சசிகலா கூறுவது நகைப்பிற்குரியது, அரசியலை விட்டு விலகுவதாக கூறிய சசிகலா நெறிமாறாமல் இருக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.


சென்னை அப்பலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டறிந்த  பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், மதுசூதனன் மூச்சுத் திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்  மீண்டுவர வேண்டும் என்பதே அதிமுகவினரின் விருப்பம் ஆகும். அதிமுகவின் கட்சிக் கொடியை சசிகலா பயன்படுத்த கூடாது. அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகவே இல்லாத சசிகலா அதிமுகவை தனது குடும்பம் என கூறுவது நகைப்பிற்குரியது. உடல் நலமற்றவரை பார்க்க வருவது ஆரோக்கியமான விஷயம். சசிகலா மதுசூதனனை பார்க்க வந்ததை கொச்சைப்படுத்த முடியாது. ஜெயலலிதாவின்  திருப்பெயரை அவர் பயன்படுத்த கூடாது.  அரசியலை விட்டு ஒதுங்குவதாக கூறிய பிறகு நெறிமாறாமல் இருப்பதே சசிகலாவிற்கு சிறந்தது” என்று கூறினார்.


மேலும் அவர் கூறுகையில், “வலுவான எதிர்கட்சியாக அதிமுக உள்ளது. 3 சதவீதம் மட்டுமே  திமுக, அதிமுக இடையே வாக்கு வித்தியாசம். தலைமை செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர், உதயநிதி படத்தை வைத்தது விதிமீறல், சட்ட அமைச்சர் வேண்டுமானால் தனது பூஜை அறையில் உதயநிதி படத்தை வைத்து பூஜை நடத்தட்டும். உதயநிதி முதல்வரா , நிழல்  முதல்வரா..?. அவரது படம் சட்ட அமைச்சர் அறையிலிருந்து அகற்றப்பட வேண்டும். 




திமுக தேர்தல் வாக்குறுதியாக சொன்ன பெண்களுக்கு 1000 ரூபாய் , பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கல்விக் கடன் ரத்து தொடர்பாக எந்த நடவடிக்கையையும் திமுக எடுக்கவில்லை. திமுகவின் 505 வாக்குறுதிகளை நிறைவேற்ற 5 லட்சம் கோடி வேண்டும். 15 ஆண்டுகளாக காங்கிரஸ் முதுகில் திமுக ஏறி சவாரி செய்ததை போல பாஜக முதுகில் அதிமுக  பயணிக்கவில்லை" என்று கூறினார்.


முன்னதாக, மதுசூதனன் உடல் நலம் பற்றி விசாரிக்க சசிகலா அப்பல்லோ மருத்துவமனை வருகை தந்தார். அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் தன்னுடைய வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு அவர் வருகை தந்தார். அதே நேரத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அப்பல்லோ மருத்துவமனையில் மதுசூதனன் உடல் நலம் பற்றி விசாரிக்க மருத்துவமனைக்கு வந்தார். ஒரே நேரத்தில் இபிஎஸ் மற்றும் சசிகலா அப்பல்லோ வளாகத்தில் இருப்பதால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.  


ABP நாடு Exclusive: ‛எவிடென்ஸெல்லாம் ரொம்ப ஷாக்கா பயமா இருக்கு!’ - கோடநாடு கொலை குறித்து அஸ்பையர் சுவாமிநாதன்!