மறைந்த ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்குச் சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய வளையார் மனோஜுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. தங்களை ஏவியது எடப்பாடி பழனிசாமிதான் எனக் குற்றம்சாட்டியவர் வளையார் மனோஜ் என்பது குறிப்பிடத்தக்கது. மனோஜ் தற்போது ஜாமீனில் வெளிவந்திருப்பதை அடுத்து கோடநாடு கொலை வழக்கில் பல்வேறு திருப்பங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே அதிமுகவின் முன்னாள் ஐ.டி. பிரிவு நிர்வாகியான ’அஸ்பையர்’ சுவாமிநாதன் கோடநாடு கொலை வழக்கு குறித்து தொடர்ச்சியாக பல தகவல்களைத் தனது ட்விட்டர் வலைதளத்தில் பகிர்ந்து வந்தார். 






'கொடநாடு எஸ்டேட்டில் கொலை கொள்ளை, விலகாத மர்மங்கள் வெளிச்சத்துக்கு வராத உண்மைகள்...விரைவில்……’






’கொடநாடு எஸ்டேட்டில் காவலர் கொலை செய்யப்பட்டு கொள்ளை முயற்சி, கார் டிரைவர் விபத்தில் மரணம் என அவிழ்க்கப்படாத முடிச்சுகள்…. ஆதாரங்களுடன் அனைத்தர்கும் அதிர வைக்கும் விடைகள்…..  Game Over Bro….’






குற்றம் சாட்டப்படுபவர் யார் எனக் குறிப்பிடாமல் மொட்டை ட்வீட்களை அவர் தொடர்ச்சியாகப் பதிவிட்டு வந்த நிலையில் அந்த ட்வீட்களை அகற்றச் சொல்லி அவருக்கு மிரட்டல் வந்ததாகத் தெரிகிறது. அதுபற்றிக் குறிப்பிட்டிருக்கும் அவர் ‘என்னை ஏன் மிரட்டுகிறார்கள், என் ட்வீட்களை ஏன் அகற்றச் சொல்கிறார்கள்? நம்பகத்தன்மையுள்ள வட்டாரத்திலிருந்து வரும் தகவல்களை நான் பகிரக்கூடாதா?நான் ட்வீட்களை அகற்றப்போவதில்லை. என்னதான் ஆகிறது எனப் பார்ப்போம்’ எனக் குறிப்பிட்டிருந்தார். 


அஸ்பையர் சுவாமிநாதனின் இந்த ’மர்ம’ ட்வீட்கள் குறித்து அவரிடமே கேட்டோம், ‘நம்பகத்தன்மை வாய்ந்த நபர் ஆதாரங்களைப் பற்றியும் கொலைக்குக் காரணமானவர்கள் பேசினது பற்றியும் சொன்னாங்க. கேட்கவே ரொம்ப ஷாக்கிங்காவும் பயமாகவும் இருந்தது’ எனக் கூறினார். 


சுவாமிநாதன் குறிப்பிடும் ‘அந்த’ நபர் யார்? கோடநாடு பங்களா கொலைகளின் மர்ம முடிச்சுகள் அவிழுமா? பொறுத்திருந்து பார்ப்போம். 


Also Read: ’அதிமுக மாநில மகளிரணி செயலாளர் பதவி’ ரேசில் முந்தப்போவது யார்..?