கிருஷ்ணகிரியில் எரிவாயுகுழாய் பதிப்பு பிரச்னைக்கு தீர்வு காணாமல் அதிமுக மீது கண்டனம் தெரிவிப்பதா? என்று அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.


அதிமுக ஆட்சியில்தான் கிருஷ்ணகிரியில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் அமைத்தது என்று ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்து அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார். தற்போது தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளித்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


இதுதொடர்பாக ஓபிஎஸ் இன்று வெளியிட்ட அறிக்கை: ஆளும் கட்சியின் அமுலில் ஏற்படும் அல்லல் அவதியை எடுத்துக்காட்டுவதும் எதிர்க்கட்சிக்கு இருக்க வேண்டிய இலட்சணங்களில் ஒன்று என்றுகூறியவர் அண்ணா.


அந்த வகையில், அண்மையில் ஒசூர் வழியாக உத்தனப்பள்ளி வரை விவசாயிகள் நிலங்கள் ஊடே எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தினை கெயில் நிறுவனம் மீண்டும் தொடங்கிய நிலையில், அதற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தினை நடத்தி, இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்திருந்ததன் அடிப்படையில், வேளாண் நிலங்கள் பாதிக்காத வகையில் நெடுஞ்சாலைகளின் ஓரமாகப் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் அவர்களை நான் அறிக்கை வாயிலாக கேட்டிருந்தேன்.


விவசாயப் பெருங்குடி மக்கள் அவதிப்படுவதை சுட்டிக்காட்டி நான் வெளியிட்ட அறிக்கைக்கு மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் அவர்கள் பதில் அளித்திருப்பதற்காக அவருக்கு முதலில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால், இதன்மூலம் எனது அறிக்கையில் உள்ள முக்கியமான அம்சத்தை விளக்கிட எனக்கு ஒரு வாய்ப்பினை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அளித்திருக்கிறார்.




என்னுடைய அறிக்கையை சரியாக புரிந்து கொள்ளாமல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கண்டனம் தெரிவிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தனது அறிக்கையை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்.


மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தனது அறிக்கையில், "பெட்ரோலியம் மற்றும் எரிவாயு குழாய்கள் பதிக்கும் திட்டங்களை பொறுத்தவரை, நில உரிமையாளர்களின் ஒத்துழைப்புடனும், கூடுதல் இழப்பீடு வழங்கியும் இந்தத் திட்டங்கள் தமிழகத்தில் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதாகவும், எங்கெல்லாம் சாத்தியக்கூறுகள் உள்ளதோ, அவ்விடங்களில் எல்லாம் சாலை ஓரமாக குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசால் வலியுறுத்தப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.


ஆனால், நான் எனது அறிக்கையில் கட்டிக்காட்டியுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில், அங்குள்ள நில உரிமையாளர்கள் எரிவாயு குழாய் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அப்பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள். வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கிறார்கள். மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கிறார்கள். புதிதாக அமைக்கப்படஉள்ள தர்மபுரி-ஓசூர் நான்கு வழிச் சாலையில் சாலையோரம் எரிவாயு குழாய்களை பதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், போராட்டம் நடத்திய விவசாய பெருமக்களை, நில உரிமையாளர்களை நேரில் சந்தித்து அவர்களுடைய பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காமல், சுட்டிக்காட்டிய எனக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் கண்டனம் தெரிவிப்பது என்பது தி.மு.க.விற்கு மக்கள் மீது உள்ள அக்கறையின்மையைக் காட்டுகிறது.


வளர்ச்சித் திட்டங்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் குந்தகம் விளைவிப்பதாக மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்து இருப்பதைப் பார்க்கும்போது, ஆட்சியில் இருக்கும்போது மீத்தேன் திட்டத்தில் கையெழுத்திடுவது, ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வது போன்ற பணிகளை மேற்கொண்டுவிட்டு, ஆட்சி பறிபோனவுடன், அதற்கு எதிராக போராட்டங்களை நடத்துவது என்ற தி.மு.க.வின் இரட்டை நிலைப்பாடுதான் என் நினைவிற்கு வருகிறது. மாண்புமிகு தொழில் துறை. அமைச்சரின் நிலைப்பாடு மீண்டும் மீத்தேன், ஸ்டெர்லைட் போன்றவற்றை தி.மு.சு. அரசு திரும்பக் கொண்டு வருமோ என்ற அச்சத்தை மக்கள் மனங்களில் ஏற்படுத்தியுள்ளது.


எனவே, எரிவாயு குழாய் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதற்கு மாற்று வழியையும் தெரிவிக்கும் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயப் பெருங்குடி மக்களை, நில உரிமையாளர்களை சந்தித்து, அந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுபென்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.