ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் மேற்குவங்கத்தின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்தனர். அவரது உதவியாளர் அர்பிதா பானர்ஜி வீட்டில் நடத்திய சோதனையில் 21.90 கோடி ரூபாய் பணம், நகை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறையின் கைப்பற்றினர். 


கைது நடவடிக்கை


அதனை தொடர்ந்து, சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை செய்த வழக்கில் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜியை அமலாக்கத்துறையினர் இம்மாதம் 23-ம் தேதி மாலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மாநில அரசின் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து மேல் சிகிச்சைக்காக ஒடிசாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள் பார்த்தா சாட்டர்ஜி நலமுடம் இருப்பதாக தகவல் அளித்தனர்.



பார்த்தா டிஸ்சார்ஜ்


உடல்நலம் சீரானதை அடுத்து மருத்துவமனையில் இருந்து அவர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து கொல்கத்தா அழைத்து வரப்பட்ட பார்த்தா சாட்டர்ஜியிடம் இன்று அமலாக்கத்துறையினர் விசாரணையை தொடங்க உள்ளனர். பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜியை வரும் 3-ம் தேதி வரை விசாரணை செய்ய அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், தனது அமைச்சரவையில் உள்ள பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டுள்ளது குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்: Rahul Gandhi Detained: அமலாக்கத்துறை விசாரணையை எதிர்த்து டெல்லியில் காங்கிரஸ் பேரணி - ராகுல் காந்தி கைது


எய்ம்ஸ்-ல் மாற்றிய நோக்கம் என்ன?


இந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்த மம்தா பேசுகையில், "நாட்டின் மிகச்சிறந்த நம்பர் ஒன் மருத்துவமனையான எஸ்எஸ்கேஎம்-இல் பார்த்தா சாட்டர்ஜி அனுமதிக்கப்பட்டிருந்தபோது மத்திய அரசுடன் தொடர்பில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை கொண்டு சென்றது ஏன்? அப்படியே செல்ல வேண்டிய சூழல் என்றால் இஎஸ்ஐ மருத்துவமனை, கமண்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாதது ஏன்? இதன் உள்நோக்கம் என்ன?" என்று கேட்டார்.



யானை மிதிக்கும்


மிகவும் ஆக்ரோஷமாக பேசிய அவர், "இது மேற்குவங்க மக்களை அவமதிக்கும் செயல் இல்லையா? மத்திய அரசு மட்டும் நல்லவர்கள் மற்றும் அனைத்து மாநிலங்களும் திருடர்கள் என்று நினைக்கிறீர்களா? மாநிலங்கள் இருப்பதால் தான் நீங்கள் மத்தியில் இருக்கிறீர்கள். மராட்டியத்தால் இம்முறை எதிர்த்து போரிட முடியவில்லை. மராட்டியத்திற்கு பிறகு சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மேற்குவங்காம் எனக் கூறுகிறீர்கள். முடிந்தால் இங்கு வந்து பாருங்கள்… வங்காள விரிகுடாவை கடந்துதான் வர வேண்டும், முதலைகள் உங்களைக் கடிக்கும். சுந்தரவனக்காடுகளில் உள்ள வங்கப்புலிகள் உங்களை கடிக்கும். வடக்கு வங்காளத்தில் உள்ள யானைகள் உங்களை தூக்கி போட்டு மிதிக்கும்." என்று கூறினார். 


சேற்றை அள்ளி வீசுவேன்


மேலும் பேசிய அவர், "மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் என் கட்சியை உடைத்துவிடலாம், ஆட்சியை கவிழ்த்து விடலாம் என பாஜக நினைத்தால் அது முற்றிலும் தவறு. குறிப்பிட்ட காலத்திற்குள் உண்மை நிச்சயம் வெளிவரும். நான் யாரையும் விடமாட்டேன்… திருடனோ, கொள்ளைக்காரனோ, யாரையும் நான் விடுவதில்லை. அது என் சொந்த மக்களாக இருந்தாலும் சரி. எனது எம்எல்ஏ-க்கள், எம்.பி.க்கள், மந்திரிகளையும் கூட நான் தப்பவிடுவதில்லை. என் மீது நீங்கள் மை வீச முயற்சித்தால் நான் உங்கள் மீது சேற்றை அள்ளி வீசுவேன்", என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.