சென்னையில் அதிமுக சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் தலைமையில், அக்கட்சியின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டக் கழக செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் முன்னதாக நடைபெற்றது.


ஜூலை 27ஆம் தேதி ஆர்ப்பாட்டம்


இக்கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ”அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பின்படி இன்றைக்குக் கண்டன ஆர்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. குறிப்பாக திமுக பொறுப்பேற்று சொத்துவரி உயர்வு, விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு என மக்கள் இந்த கொடுங்கோல் ஆட்சியில் அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையில், இதனை ஜனநாயக வழியில் மக்களுக்கு எடுத்துச்சொல்லுகின்ற வகையில் இன்றைக்கு அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்பாட்டங்கள் சிறப்பாக எழுச்சியோடு நடைபெற்று வருகின்றன.


திமுக ஆட்சிக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டம் வரும் 27ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. அமைப்பு ரீதியாக மொத்தம் 9 மாவட்டங்கள் உள்ளன. இந்த 9 மாவட்டச்  செயலாளர்களும் இன்றைக்கு ஒன்றுகூடி இந்த ஆர்பாட்டம் ஒரு எழுச்சியாக நடைபெறவேண்டும் என்ற வகையிலே இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது” என்றார்.


பிரதமர் ஈபிஎஸ்ஸை சந்திக்காததற்கு காரணம்...


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு ஜெயக்குமார் அளித்த பதில்கள் பின்வருமாறு:


கேள்வி:  இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பாதியிலே திரும்பி விட்டார். பிரதமர், உள்துறை அமைச்சர் அவரை சந்திக்க மறுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறதே?


பதில்: குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு நிகழ்ச்சியில் தம்பிதுரை கலந்துகொண்டுள்ளார். இருக்கின்ற சூழ்நிலையைப் பார்க்கவேண்டும். ஒரு பக்கம் குடியரசுத் தலைவருக்கான தேர்தல். மற்றொன்று குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல். அடுத்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர். இந்த மூன்றும் நடக்கும் சூழ்நிலையில் அவர்களுக்கு எவ்வளவு வேலை இருக்கும். வேறு ஒரு நாளில் இந்தச் சந்திப்பு இருக்கும். நாங்கள் சந்திக்கிறோம் என்று கேட்டு அவர்கள் வாய்ப்பு தரவில்லை என்று தெரிவிக்கவில்லை. 


ஆள் இல்லாத டீக்கடையில் ஓபிஎஸ்


கேள்வி : பிரதமர் சென்னை வரும்போது ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்கிறார் என்று சொல்லப்படுகிறதே?


பதில்:  பிரதமர் சென்னை வரும்போதெல்லாம் கோரிக்கை மனுவை அதிமுக சார்பில் அளிக்கிறோம். இதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. அந்த வகையில் அதிமுக சார்பில் பொதுக்குழுவால் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திப்பார். பிரதமர் யாரைச் சந்திக்கவேண்டும், சந்திக்கக்கூடாது என்பதை நாங்கள் முடிவு செய்ய முடியாது. எங்களைப் பொறுத்தவரையில் மாநிலத்தின் நலன் கருதி மக்கள் விரோத ஆட்சியின் செயல்பாடுகளை எடுத்துச்சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமி பிரதமரைச் சந்திப்பார். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஜிஎஸ்டி போன்றவற்றை எடுத்துச்சொல்லி மாநிலத்தின் உரிமையைக் காக்கும் வகையில் மனுக்களை அளிப்போம்.


கேள்வி: ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் புதியதாக மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களே?


பதில்: ஆள் இல்லாத கடையில் டீ ஆற்றும் கதைதான் இது. ஒட்டுமொத்தமாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி இன்றைக்குச் செயலாற்றி வருகிறது. அவர்கள்  தரப்பில் ஒருசிலரை நியமித்து விட்டு நான்தான் கட்சி என்றால் அது எள்ளி நகையாகக்கூடிய விஷயமாகத்தான் பார்க்க முடியும்.


கருணாநிதி சிலை


கேள்வி : ரூ.80 கோடியில் கருணாநிதியின் பேனா சிலை மெரினாவில் வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதே?


பதில்: தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவருவோம், கல்விக் கடன் ரத்து, மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, கேஸ் உருளை மானியம், முதியோர் உதவித் தொகை உயர்வு இதுபோன்று மக்கள் எதிர்பார்க்கின்ற வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அதற்கு நிதி இல்லை என்று சொல்லிவிட்டு, ஸ்டாலினின் தந்தையின் புகழ்பாடவேண்டும் என்பதற்காக ஊர்தோறும் சிலை வைப்பது போன்றவற்றுக்கு எங்கிருந்து பணம் வருகிறது.


இவற்றுக்கு எல்லாம் பணம் இருக்கின்றது.மக்கள் நலன் சார்ந்த விஷயத்திற்குப் பணம் இல்லையா? அவரின் அப்பா புகழ்பாடுவதில் தவறில்லை. அவர்களின் அறக்கட்டளையில் ஏகப்பட்ட பணம் உள்ளதே. அதிலிருந்து எடுத்து செலவு செய்யலாமே. மக்கள் வரிப் பணத்தில் இப்படிச் செய்யலாமா? இரண்டு விஷயத்தைத் தெளிவாகச் செய்துகொண்டுள்ளார்கள். ஒன்று விளம்பர அரசியல். இதற்கு கோடிக்கணக்கான பணத்தைச் செலவு செய்கிறார்கள். இன்னொன்று அவரின் அப்பா புகழ்பாடும் விஷயம்தான் நடைபெற்றுவருகிறது.  நாங்கள் கொண்டுவந்த திட்டத்திற்கு லேபிள் ஒட்டும் வேலைதான் இன்றைக்கு நடைபெற்றுவருகிறது.


கார்ப்பரேட் நிறுவனத்தில் இருந்தவர் நிதியமைச்சர்’


கேள்வி:  மின் கட்டண உயர்வுக்குப் போராட்டம் நடத்திய நீங்கள், கேஸ் விலை உயர்வுக்கு ஏதாவது போராட்டம் நடத்துவீர்களா?


பதில்:  மத்திய அரசு சர்வதேச அளவுக்கு கச்சா எண்ணெய்யின் அடிப்படையில் விலையை ஏற்றுகிறது, இறக்குகிறது. இதற்கு திமுக மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினாலும் நாங்கள் விலையைக் குறைப்போம் என்று சொன்னார்கள் இல்லையா? மத்திய அரசைப் பொறுத்தவரையில் விலையை இரண்டு முறை குறைத்தது. இதற்கு ஏற்ற வகையில் திமுக விலையைக் குறைக்கவில்லையே.


அன்றைக்கு எடப்பாடி பழனிசாமியின் அறிவுரையைப் பெற்று 40க்கும் மேற்பட்ட ஜிஎஸ்டி கூட்டத்தில் நான் கலந்துகொண்டேன். கிட்டதட்ட 28 சதவீத வரியை 18 ஆகிக் குறைத்துள்ளோம்.18 சதவீத வரியை 12ஆக, 5ஆகக் குறைத்துள்ளோம். உணவகங்களுக்கு மிக அதிகமாக ஜிஎஸ்டி இருந்தது. நாங்கள் கருத்து தெரிவித்து 5 சதவீதமாகக் குறைத்தோம். சினிமா,பட்டாசு தொழில், தீப்பெட்டி இதுபோன்று பல்வேறு விஷயங்களை ஜெயலலிதா அரசுதான் வரி குறைப்பு செய்தது.


எங்கள் ஆட்சிக் காலத்தில் ஜிஎஸ்டி தொடர்பாக எந்த ஆர்பாட்டம்,போராட்டம் நடைபெற்றதா? 40 கூட்டங்கள் நடந்தன. ஒவ்வொரு கூட்டத்திற்கு முன்னர் ஒவ்வொரு துறையினரின் ஆலோசனையைப் பெற்று ஒரு மக்கள் நலன் என்ற அடிப்படையிலே அங்குச் சென்று பேசினோம். கருத்துக்களைத் தெரிவித்தோம். ஆனால் இன்றைக்கு எந்த ஆட்சேபனையும் இவர்கள் தெரிவிப்பதில்லை. 


கார்பரேட் நிறுவனத்தில் பணிபுரிந்தவர் நிதி அமைச்சராக இருந்தால் அவருடைய எண்ணம் எப்படி இருக்கும்? வருமானத்தைப் பெருக்கும் வகையில்தான் இருக்குமே தவிர வேறு இருக்காது. ஏழை எளிய மக்களின் பசியைப் போக்கும் எண்ணம் இந்த அரசுக்கு கிடையாது.


கேள்வி:  ராம்நாத் கோவிந்த் செயல்பாடு  குறித்து உங்கள் கருத்து என்ன?


பதில்:  குடியரசுத் தலைவர் என்ற முறையில் அவர் செயல்பட்டுள்ளார் என்றுதான் நான் கருத முடியும். எங்களைப் பொறுத்தவரையில் மாநிலத்தின் நலன் சிறுபான்மை மக்களின் நலன். அது எந்தவகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருப்போம்.


கேள்வி : போலி பாஸ்போட் விவகாரம் தொடர்பாக அண்ணாமலை ஆளுநரை சந்தித்து புகார் அளித்துள்ளாரே?
பதில்:  தவறுகள் இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கைக்கு உட்பட்டுத்தான் ஆகவேண்டும். இதில் எனக்கு மாறுபட்ட கருத்து எங்களுக்கு கிடையாது.”


இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.