கடந்த சில தினங்களாக தான் மீண்டும் அரசியலுக்கு வருவேன், கட்சியை மீட்பேன் என்று சசிகலா பேசியது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவுடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தனிப்பட்ட குடும்பத்திற்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்த இயக்கம் தொண்டர்களுக்கான இயக்கம். மீண்டும் அ.தி.மு.க.வை கைப்பற்றி கொள்ளை அடிக்கலாம் என்று சசிகலா திட்டம் போடுகிறார்.


அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் பதவி கூட இல்லாத, சசிகலாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அ.தி.மு.க.வில் இனி எப்போதும் இடமே இல்லை. இந்த இயக்கத்தை எப்படியாவது அபகரித்துக்கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் சசிகலா யார், யாருக்கோ தொலைபேசியில் பேசி நாடகம் ஆடி வருகிறார்.




அ.தி.மு.க.விற்கும், சசிகலாவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் வரை சென்று தெள்ளத்தெளிவாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்று சசிகலா கனவு காண்கிறார். அவரது கனவு ஒருபோதும் நனவாகாது.


சசிகலா குடும்பம் அடித்த கொள்ளையால்தான் வீண்பழியை ஏற்றுக்கொண்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறைக்குச் சென்றார். ஜெயலலிதாவின் சாபத்தால்தான் சசிகலா ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றார். அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் பதவியிலேயே இல்லாத சசிகலாவுக்கு அ.தி.மு.க.வை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும், தார்மீத உரிமையும் கிடையாது. இன்றைக்கு நமக்கு எதிரி தி.மு.க. மட்டுமல்ல. இந்த இயக்கத்திற்கு துரோகம் விளைவிக்க நினைக்கும் துரோகிகளை இனம் கண்டுகொண்டு இயக்கத்தை ஜாக்கிரதையாக நடத்த வேண்டும். சசிகலா குடும்பத்தை நாம் எந்த காலத்திலும் நெருங்கவிடக்கூடாது. சசிகலாவுடன் பேசும் நிர்வாகிகளை உடனடியாக கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற தலைமை கழகத்தினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. ஏற்றுக்கொண்டு வரவேற்கிறது” எனப் பேசினார்.




கடந்த சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பதே நமது இலக்கு என்றும், தான் அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என்றும் அறிக்கை ஒன்றை சசிகலா வெளியிட்டார். பின்னர், சட்டசபை தேர்தலின்போதும், பரப்புரைகளின்போதும், முடிவுகளின் போதும் எந்தவித கருத்தையும் சசிகலா தெரிவிக்கவில்லை. தொடர்ந்து பல கோயில்களுக்கு சுற்றுப்பயணம் மட்டும் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சசிகலா தனது ஆதரவாளர்களுடன் பேசும் ஆடியோக்கள் வெளியாகி வருகிறது. இது அவரது ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை  ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சசிகலாவுடன் பேசிய 15 பேரை கட்சியில் இருந்து கட்சித் தலைமை கடந்த வாரம் நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க : ”சமூக ஊடகங்களில் கட்சியினரை விமர்சிப்பவர்கள் நீக்கப்படுவர்” : பாமகவினருக்கு ராமதாஸ் எச்சரிக்கை..!