Erode By-Election Result: இதுவரை யாருமே படைக்காத சாதனை..! ஈரோடு கிழக்கில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புதிய வரலாறு..!

ஈரோடு கிழக்கு தொகுதியில் முதன்முறையாக 1 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்ற வேட்பாளர் என்ற புதிய வரலாற்றை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் படைத்துள்ளார்.

Continues below advertisement

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாதகாலமாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஈரோடு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதுமே இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியினரே வெற்றி பெறுவது எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டிலும் ஆளுங்கட்சியான தி.மு.க.வின் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.

Continues below advertisement

பிரம்மாண்ட வெற்றி:

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெற்றுள்ள வெற்றி என்பது காங்கிரஸ் கட்சியினரே எதிர்பாராத அளவிற்கு கிடைத்த பிரம்மாண்ட வெற்றியாக அமைந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியான மிகவும் பழமையான தொகுதி கிடையாது. தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட பிறகு கடந்த 2008ம் ஆண்டு உருவாக்கப்பட்டதே இந்த ஈரோடு கிழக்கு தொகுதி ஆகும். இதுவரை இந்த தொகுதி தற்போது நடந்துள்ள இடைத்தேர்லையும் சேர்த்து 4 சட்டமன்ற தேர்தல்களை மட்டுமே சந்தித்துள்ளது.


1 லட்சம் வாக்குகள்

கடந்த 27-ந் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் மொத்தம் 74.69 சதவீதம் வாக்குகள் பதிவாகியது. அதாவது, 82 ஆயிரத்து 021 ஆண்களும், 87 ஆயிரத்து 907 பெண்களும், மூன்றாம் பாலினததவர் 17 பேரும் என மொத்தம் 1 லட்சத்து 69 ஆயிரத்து 945 வாக்குகள் பதிவாகியது. இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது முதல் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆதிக்கம் செலுத்தினார். காலையிலே அவரது வெற்றி உறுதியானதைத் தொடர்ந்து, அதிகாரப்பூர்வமாக 15 சுற்றுகளும் நிறைவடைந்து அவர் வெற்றி பெற்றது அறிவிக்கப்பட்டுள்ளது.

இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 556 வாக்குகள் பெற்று 2வது இடம் பிடித்த அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசை காட்டிலும் 66 ஆயிரத்து 575 வாக்குகள் அதிகம் பெற்று பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதி உருவானது முதல் சுமார் 60 ஆயிரத்திற்கு மேல் வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு வேட்பாளர் வெற்றி பெறுவது இதுவே முதன்முறை ஆகும்.


இதுவரை யாருமே பெறாத வெற்றி:

2011ம் ஆண்டு இந்த தொகுதியில் இருந்து தேர்வான முதல் எம்.எல்.ஏ. சந்திரகுமார் 10 ஆயிரத்து 644 வாக்குகள் மட்டுமே பெற்று வெற்றி பெற்றார். 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தற்போது தோல்வியடைந்துள்ள தென்னரசு சந்திரகுமாரை காட்டிலும் 7 ஆயிரத்து 794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், காலமான ஈவெரா திருமகன் 8 ஆயிரத்து 904 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றார். ஆனால், தற்போது வெற்றி பெற்றுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் சுமார் 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதற்கு முன்பு எம்.எல்.ஏ.வாக இந்த தொகுதியில் இருந்த 2011ம் ஆண்டு சந்திரகுமார் 69 ஆயிரத்து 166 வாக்குகளும், 2016ம் ஆண்டு தென்னரசு 64 ஆயிரத்து 879 வாக்குகளும், 2021ம் ஆண்டு திருமகன் ஈவெரா 67 ஆயிரத்து 300 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தனர். ஆனால், இடைத்தேர்தலில் களமிறங்கிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 556 வாக்குகள் பெற்று இதுவரை யாருமே இந்த தொகுதியில் பெறாத வாக்குகளை பெற்றுள்ளார். ஈவிகேஎஸ் இளங்கோவன் பெற்ற இந்த பிரம்மாண்ட வெற்றி தி.மு.க. கூட்டணி கட்சியினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: Erode East By Election Result: ஒரு லட்சத்து, 10 ஆயிரம் வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி..

மேலும் படிக்க: Assembly Election Results 2023 LIVE: திரிபுராவில் தனித்து ஆட்சி அமைக்கும் பாஜக...நாகாலாந்தில் சொல்லி அடித்த என்டிபிபி - பாஜக கூட்டணி..!

Continues below advertisement