ஈரோடு கிழக்குத் தொகுதியின் இடைத்தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் இளங்கோவனின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 


"ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான் பெரும்பாலும் வெற்றி பெறும் என்பது அனைவரும் அறிந்ததே. தி.மு.க. அரசின் செயல்பாட்டை ஆராய்ந்து மக்கள் வாக்கு அளித்துள்ளனர் என்பதை ஏற்க மாட்டோம். 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பா.ஜ.க.வுக்கான தேர்தல் ஆகும். ஒரே சின்னத்தில் ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் நிற்க வேண்டும் என்று பா.ஜ.க. முன்பே கூறியது. ஆளுங்கட்சியை எதிர்க்க எவ்வளவு பலம் தேவை என்பதை இடைத்தேர்தல் உணர்த்தியுள்ளது.”


இவ்வாறு அவர் கூறினார்.


ஈரோடு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அரசியல் கட்சிகளின் பரப்புரை, முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், அரசியல் கட்சித் தலைவர்களின் வருகை என்று ஈரோடு கிழக்குத் தொகுதியே களைகட்டியது. கடந்த 27-ந் தேதி திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகலாயா மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டசபை தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.


இந்த நிலையில், இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது முதலே அனைவரும் எதிர்பார்த்தது போலவே ஆளுங்கட்சியின் ஆதரவு பெற்ற காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்தது. தற்போதைய நிலவரப்படி ஈரோடு கிழக்குத் தொகுதியில் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதனால், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றி உறுதியாகியுள்ளது.


இந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க. தமிழ்நாட்டில் அவர்களது கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பதில் தொடங்கியது முதல் ஏராளமான குழப்பங்களும், குளறுபடிகளும் இருந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளராக களமிறங்கிய தென்னரசுக்கு தொடக்கம் முதலே பின்னடைவில் இருந்தார். இந்த நிலையில், 10வது சுற்று அளவில்தான் தென்னரசு டெபாசிட்டையே தக்கவைத்தார்.


இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பரப்புரையில் ஈடுபட்டார். இந்த தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் வெற்றி உறுதி செய்யப்பட்டதையடுத்து, தி.மு.க.வினரும் காங்கிரஸ் கட்சியினரும் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.


மேலும் படிக்க: தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதலா..? வதந்தியை பரப்பியவருக்கு தக்க பதிலடி தந்த தமிழக டி.ஜி.பி..!


மேலும் படிக்க: Thennarasu Press Meet: “பணநாயகம் வென்றது; ஜனநாயகம் தோற்றது” - வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறிய அதிமுக வேட்பாளர்!