Erode East By Election Result 2023: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 66 ஆயிரத்து 575 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 556 வாக்குகள் பெற்றார்.  இரண்டாவது இடத்தில் அதிமுகவின் வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகள் பெற்றுள்ளார். இதற்கு அடுத்த இடத்தில் நாம் தமிழர் கட்சியின் மேனகா 10 ஆயிரத்து 804 வாக்குகள்  பெற்றும், தேமுதிகவின் ஆனந்த் 1,177 வாக்குகள் பெற்றுள்ளனர். நாம் தமிழர் மற்றும் தேமுதிக டெபாசிட் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  


பிரம்மாண்ட வெற்றி:


ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெற்றுள்ள வெற்றி என்பது காங்கிரஸ் கட்சியினரே எதிர்பாராத அளவிற்கு கிடைத்த பிரம்மாண்ட வெற்றியாக அமைந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியான மிகவும் பழமையான தொகுதி கிடையாது. தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட பிறகு கடந்த 2008ம் ஆண்டு உருவாக்கப்பட்டதே இந்த ஈரோடு கிழக்கு தொகுதி ஆகும். இதுவரை இந்த தொகுதி தற்போது நடந்துள்ள இடைத்தேர்லையும் சேர்த்து 4 சட்டமன்ற தேர்தல்களை மட்டுமே சந்தித்துள்ளது.




1 லட்சம் வாக்குகள்


கடந்த 27-ந் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் மொத்தம் 74.69 சதவீதம் வாக்குகள் பதிவாகியது. அதாவது, 82 ஆயிரத்து 021 ஆண்களும், 87 ஆயிரத்து 907 பெண்களும், மூன்றாம் பாலினததவர் 17 பேரும் என மொத்தம் 1 லட்சத்து 69 ஆயிரத்து 945 வாக்குகள் பதிவாகியது. இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது முதல் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆதிக்கம் செலுத்தினார். காலையிலே அவரது வெற்றி உறுதியானதைத் தொடர்ந்து, அதிகாரப்பூர்வமாக 15 சுற்றுகளும் நிறைவடைந்து அவர் வெற்றி பெற்றது அறிவிக்கப்பட்டுள்ளது.


இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 556 வாக்குகள் பெற்று 2வது இடம் பிடித்த அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசை காட்டிலும் 66 ஆயிரத்து 575 வாக்குகள் அதிகம் பெற்று பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதி உருவானது முதல் சுமார் 60 ஆயிரத்திற்கு மேல் வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு வேட்பாளர் வெற்றி பெறுவது இதுவே முதன்முறை ஆகும்.




இதுவரை யாருமே பெறாத வெற்றி:


2011ம் ஆண்டு இந்த தொகுதியில் இருந்து தேர்வான முதல் எம்.எல்.ஏ. சந்திரகுமார் 10 ஆயிரத்து 644 வாக்குகள் மட்டுமே பெற்று வெற்றி பெற்றார். 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தற்போது தோல்வியடைந்துள்ள தென்னரசு சந்திரகுமாரை காட்டிலும் 7 ஆயிரத்து 794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், காலமான ஈவெரா திருமகன் 8 ஆயிரத்து 904 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றார். ஆனால், தற்போது வெற்றி பெற்றுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் சுமார் 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


இதற்கு முன்பு எம்.எல்.ஏ.வாக இந்த தொகுதியில் இருந்த 2011ம் ஆண்டு சந்திரகுமார் 69 ஆயிரத்து 166 வாக்குகளும், 2016ம் ஆண்டு தென்னரசு 64 ஆயிரத்து 879 வாக்குகளும், 2021ம் ஆண்டு திருமகன் ஈவெரா 67 ஆயிரத்து 300 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தனர். ஆனால், இடைத்தேர்தலில் களமிறங்கிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 556 வாக்குகள் பெற்று இதுவரை யாருமே இந்த தொகுதியில் பெறாத வாக்குகளை பெற்றுள்ளார். ஈவிகேஎஸ் இளங்கோவன் பெற்ற இந்த பிரம்மாண்ட வெற்றி தி.மு.க. கூட்டணி கட்சியினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.