2021 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றிருந்தார். அவர் மாரடைப்பு காரணமாக எதிர்பாராத விதமாக உயிரிழக்க, இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்:
பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட உள்ளார். ஈவிகேஎஸ் இளங்கோவன் குறித்தும், அவர் வகித்த பதவிகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
பெரியார் பேரன்:
ஈரோடு மாவட்டத்தில் 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி ஈவிகேஎஸ் இளங்கோவன் பிறந்தார். அவரது தந்தை ஈவிகேஎஸ் சம்பத், தாயார் சுலோச்சனா சம்பத். பெரியாரினுடைய சகோதரரின் மகன்தான் ஈவிகேஎஸ் சம்பத் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பெரியார் தாத்தா உறவு முறையாகும்.
இவர் பொருளியியலில் பட்டம் பெற்றுள்ளார். இவர் வரலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சமீபத்தில் திருமகன் உயிரிழந்தார். மற்றொரு மகன் சஞ்சய் சம்பத்.
அவர் வகித்த பதவிகள்:
- 1984 ஆம் ஆண்டு முதல் 1987 ஆண்டு வரை: தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
- 1996 முதல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர்
- 1998 ஆம் ஆண்டு முதல் 2000 ஆண்டு வரை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர்
- 2000 ஆம் ஆண்டு முதல் 2002 ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்
- 2002 ஆம் ஆண்டு முதல் 2003 ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர்
- 2004 ஆம் ஆண்டு 14வது மக்களவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
- 23 மே - 24 மே 2004 மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையின் இணை அமைச்சர்
- 2004 ஆம் ஆண்டு முதல் 2005 வரை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் துறையின் இணை அமைச்சர்
- 2005 ஆம் ஆண்டு முதல் 2009 வரை மத்திய ஜவுளித் துறையின் இணை அமைச்சர்
- 2015 ஆம் ஆண்டு முதல் 2016 ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்
பல்வேறு பதவிகள் மற்றும் பொறுப்புகள் வகித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மீண்டும் சட்டப்பேரவை வேட்பாளராக களத்தில் இறங்கவுள்ளது, அதிமுக கூட்டணிக்கு வலிமையான போட்டியாளர் என்று அரசியல் விமர்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read: Erode East By Election 2023: ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தல் பணிக்குழுவை அறிவித்தது திமுக…