எதிர்கட்சிகளை தேர்தல்தான் இணைக்கும், ஆனால் வாக்காளர்கள் செய்யத் தவறிய அதனை அமலாக்க இயக்குனரகம் (ED) செய்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை எதிர்கட்சிகளை கிண்டல் செய்தார்.
எதிர்க்கட்சியினரை விமர்சித்த மோடி
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பதிலளித்த மோடி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) அரசாங்கத்தின் 10 ஆண்டு காலத்தில் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்தது என்றார். “நாட்டின் சுதந்திர வரலாற்றில், 2004-2014 ஆட்சியில் தான் ஊழல்கள் அதிகமாக இருந்தது. அந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் தீவிரவாத தாக்குதல்கள் அதிகம் நடந்தன,'' என்றார். இந்தியா ஒரு உற்பத்தி மையமாக வளர்ந்து வருவதாகவும், நம் நாட்டின் வளர்ச்சியையும், செழிப்பையும் உலகமே காண்கிறது என்றும் மோடி பெருமிதம் கொண்டார். "ஆனால் இது பிடிக்காமல் விரக்தியில் கழுத்து வரை மூழ்கியுள்ள சிலர் இந்தியா வளர்ச்சி அடைந்த உண்மையை ஏற்க மறுக்கிறார்கள். அவர்களால் 140 கோடி இந்தியர்களின் சாதனைகளைப் பார்க்க முடியாது" என்று எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து மோடி கூறினார்.
காமன்வெல்த் ஊழல்
காமன்வெல்த் விளையாட்டுகள் நடத்தும்போது செய்த ஊழல் வழக்கையும் அவர் முன்னிலைப்படுத்தி பேசினார், "இந்தியாவின் இளைஞர்களின் வலிமையை உலகிற்குக் காட்ட அது ஒரு பெரிய வாய்ப்பாக இருந்தது, ஆனால் காங்கிரஸ் அரசு செய்த மோசடி காரணமாக, இந்தியா உலகளவில் பிரபலமடைந்தது" என்று கூறினார். "2014க்கு முந்தைய தசாப்தம் 'இழப்பு தசாப்தம்' என்று அறியப்படும், மேலும் 2030 களின் தசாப்தம் 'இந்தியாவின் வளர்ச்சி தசாப்தம்' என்பதை நாங்கள் மறுக்க முடியாது," என்று அவர் மேலும் கூறினார். பிரதமர் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோஷங்களை எழுப்பிய பிஆர்எஸ், இடதுசாரி கட்சி உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் லோக்சபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தாமதமாக வந்த ராகுலை விமர்சித்த மோடி
செவ்வாய்கிழமை விவாதத்தில் பங்கேற்று, அதானி விவகாரத்தில் அரசாங்கத்தை குறிவைத்த ராகுல் காந்தி, பிரதமர் தனது ஆரம்பக் கருத்துக்களை வெளியிட்டபோது அவையில் இல்லை. பின்னர் பாதியில் தான் மக்களவைக்கு வந்தார். "நேற்று நான் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு சிலரின் பேச்சுகளுக்குப் பிறகு, சிலர் மகிழ்ச்சியுடன் இருந்தனர். அந்த மகிழ்ச்சியில் ஒருவேளை அவர்கள் நன்றாக தூங்கியிருக்கலாம், அதனால் சரியான நேரத்தில் எழுந்திருக்க முடியாமல் போயிருக்கும்," என்று மோடி தாமதமாக வந்த ராகுலை விமர்சித்தார். "இப்படிச் சொல்லி மனதை மகிழ்விக்கிறோம், இப்போது போனார்கள், இப்போது வருகிறார்கள்," என்று இந்தியில் பிரபல கவிஞர் ஜிகர் மொரதாபாடியின் ஜோடி வசனத்தை மேற்கோள் காட்டி மோடி கூறினார்.
அதானி குறித்து பேசவே இல்லை
ராகுல் காந்தி நேற்று (புதன்கிழமை) செய்தியாளர்களுடன் உரையாடியபோது, பிரதமர் "ஷெல்-ஷாக்" ஆக இருப்பதாகவும், அதானியின் விண்மீன் எழுச்சியில் பாரதிய ஜனதா கட்சி அரசாங்கத்தின் பங்கு குறித்து அவர் எழுப்பிய எந்த கேள்விக்கும் பதிலளிக்கவில்லை என்றும் கூறினார். "நான் எந்த சிக்கலான கேள்விகளையும் கேட்கவில்லை," என்று ராகுல் காந்தி கூறினார். “அவர் [அதானி] உங்களுடன் எத்தனை முறை பயணம் செய்தார், எத்தனை முறை அவரை சந்தித்தீர்கள் என்று மட்டுமே நான் கேட்டேன். அவை எளிமையான கேள்விகள். ஆனால் அதற்கும் பதில்கள் இல்லை", என்றார். செவ்வாயன்று மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, பிரதமரின் வருகைக்குப் பிறகு அதானி எத்தனை முறை வெளிநாட்டில் ஒப்பந்தம் செய்துள்ளார் என்று ராகுல் காந்தி கேட்டிருந்தார். அதானி குழுமம் இஸ்ரேல், பங்களாதேஷ் மற்றும் இலங்கை போன்ற நாடுகளுடன் வணிக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதற்கான உதாரணங்களை மேற்கோள் காட்டி, ராகுல் "இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, அதானி வெளியுறவுக் கொள்கை" என்று குற்றம் சாட்டினார். ராகுல் மோடியின் பதிலில் திருப்தி அடையவில்லை என்று கூறிய அவர், "அதானி தனது நண்பர் இல்லை என்றால், விசாரணை நடத்தப்படும் என்று அவர் (மோடி) கூறியிருக்க வேண்டும். “ஷெல் கம்பெனிகள் உருவாக்கப்பட்டுள்ளன, பினாமி நிதிகள் புழக்கத்தில் விடப்படுகின்றன, ஆனால் பிரதமர் அதைப் பற்றி எதுவும் கூறவில்லை, அதானியை பிரதமர் பாதுகாக்கிறார் என்பது தெளிவாகிறது", என்றார்.