மதுரையில் நடந்து வரும் பெந்தகொளு்தே திருச்சபைகள் மாமன்றத்தின் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக பங்கேற்று பேசினார். அப்போது, அவர் பேசியதாவது,
“நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றித் தருவோம் என்று நான் உறுதியளிக்கிறேன். அரசையும், என்னையும் பாராட்டி நீங்கள் பேசிய சொற்கள் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற நோக்கத்துடன் நான் செயல்பட்டு வருகிறேன். நமது அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களால் தமிழ்நாட்டு மக்கள் முகத்தில் மகிழ்ச்சி ஏற்படும்போது எனக்கு மன மகிழ்ச்சி ஏற்படுகிறது.
திருவள்ளூரில் இன்று புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக பயனாளிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தேன். அதற்கு பிறகு, சில மாதங்களுக்கு முன்பு ஆவடியில் முகச்சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுமி தானியாவிற்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்திருந்தேன். நலமடைந்த சிறுமி தானியாவை சந்திக்க அவரது இல்லத்திற்கு சென்றேன்.
அப்போது, அந்த குழந்தையின் முகத்தில் பார்த்த மகிழ்ச்சியைத்தான் தமிழ்நாடு மக்களின் முகத்தில் காண நாங்கள் உழைத்து வருகிறோம். எந்த நம்பிக்கையோடு மக்கள் வாக்களித்தார்களோ, அதைவிட அதிக நம்பிக்கையை 20 மாதங்களில் பெற்றுள்ளோம். இந்த நம்பிக்கைக்கு பின்னால் இருப்பது உழைப்பு. இந்த உழைப்பிற்கு பின்னால் இருப்பது உண்மை. உண்மையாக உழைக்கும் எங்களுக்கு இந்த பாராட்டுகள் அதிகளவில் உழைக்கத் தூண்டுகோலாக அமையும்.
இது எனது அரசு அல்ல. நமது அரசு. உத்தரவிடுங்கள் நாங்கள் நிறைவேற்றித் தருகிறோம். குடியரசு தின உரையிலே நாட்டின் பன்முகத்தன்மை பற்றியே ஜனாதிபதி அதிகமாக பேசியுள்ளார். அநீதிக்கு எதிராக குரல் கொடு என்பதுதான் நீதி. மற்றவர்களுக்காக வாதாடு என்பதுதான் தியாகம். இத்தகைய குணங்கள் ஒவ்வொருவருக்கும் இருந்தால் அதுதான் சமத்துவ நாடாக அமையும்.
மனிதர்கள் அனைவரும் சமம் என்பதுதான் சமத்துவம். யாரையும் வேற்றுமையாக பார்க்காதே என்பதுதான் சகோதரத்துவம். அனைவருடனும் சேர்ந்து வாழ் என்பதுதான் ஒற்றுமை. ஏழைகளின் மீது கருணை காட்டு என்பதுதான் இரக்கம். எல்லாருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படை நோக்கம். கிறிஸ்தவ மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தர ரூபாய் 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் விடுதி மாணவர்களுக்கு சிறுபான்மையினர் பண்டிகை நாட்களில் சிறப்பு உணவு வழங்கப்பட உள்ளது. மதுரை, கரூர், தேனி மாவட்டங்களில் கிறிஸ்தவ உதவி சங்கம் கூடுதலாக தொடங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.”
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் படிக்க: மதுரையில் வைகை ஆற்றில் வெளிப்படையாக கலக்கப்படும் கழிவுகளால் நிறம் மாறிய தண்ணீர் - பொதுமக்கள் அச்சம்
மேலும் படிக்க: Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூடுதல் பாதுகாப்பு நியமனம்.. படை எடுக்கும் மத்திய பாதுகாப்பு படையினர்..