மதிமுகவை திமுகவுடன் இணைப்பதுதான் சமகால அரசியலுக்கு சால சிறந்தது என்று அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, வைகோவிற்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும், மகனை அரவணைப்பதும் சந்தர்ப்பவாத அரசியலும் எள்ளி நகையாட வைத்து விட்டது எனவும் வைகோவை கடுமையாக சாடும் வகையில் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.


துரைசாமியின் இந்த அறிக்கை மதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ இது தொடர்பாக  பேட்டி அளித்துள்ளார். ”கட்சியின் பொதுகுழுவில் விவாதிக்க வேண்டியதை பொதுவெளியில் வெளியிடுவது முறையல்ல என்று தெரிவித்தார். மதிமுக - திமுக இணைப்பு தொடர்பாக துரைசாமியின் கடிதத்தை புறக்கணிக்க வேண்டும்" என்றார். மதிமுக அவைத்தலைவர் பதவியில் இருந்து திருப்பூர் துரைசாமியை மாற்றுவது குறித்து ஜூனில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் துரைசாமி எழுப்பிய கேள்விகளுக்கு வைகோ பதில் அளிப்பார் என்றும் தெரிவித்துள்ளார். 


 மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதிய  விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,


"தங்களின் சமீப கால நடவடிக்கைகளால், கட்சிக்கும், தங்களுக்கும், மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. சந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்கு, தாங்களும் அப்பாற்பட்டவர் இல்லை என்பதை கட்சியினர் அறிந்துள்ளனர். அதனால், தமிழ்நாடு முழுவதும் பழைய உறுப்பினர்கள் கூட, தங்களை புதுப்பித்துக் கொள்ள முன்வரவில்லை
என்றும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதில், நிர்வாகிகளிடம் தொய்வு ஏற்பட்டு, ஆர்வம் குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். கிளை உறுப்பினர்கள் 25 பேர் இருக்க வேண்டும் என்ற விதியை, தாங்கள் 10 உறுப்பினர்கள் இருந்தால் போதும் என்று மாற்றியிருப்பது, கட்சியின் வளர்ச்சியை காட்டுகிறதா? அல்லது வீழ்ச்சியை காட்டுகிறதா? கடந்த 30 ஆண்டுகளாக, கொங்கு மண்டலம், மதிமுகவின் கோட்டை என பேசி வருகிறீர்கள். ஆனால், கொங்கு மண்டலத்தில் உள்ள 3 மாநகராட்சிகளிலும், மாநகர மாவட்ட செயலர் தேர்தலை நடத்தி முடித்து விட்டீர்கள் என கூறப்படுகிறது. திருப்பூர், ஈரோடு மாநகராட்சி வார்டுகளிலும், போலி பெயர்களில் உறுப்பினர்களை பதிவு செய்து, தேர்தல்களை நடத்தி முடித்துள்ளீர்கள்.


கொங்கு மண்டலத்திலேயே மதிமுகவின் நிலை இப்படி இருக்க வேறு மாவட்டங்களைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கடந்த 30 ஆண்டுகளாக, உங்கள் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி, வாழ்க்கையை இழந்த கட்சியினர், மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க, கட்சியை, தாய் கட்சியான திமுகவில் இணைத்து விடுவது சமகால அரசியலுக்கு சாலச்சிறந்தது" எனத் தெரிவித்தது குறிப்பித்தக்கது.


மேலும் படிக்க,


Crime: கோவை நீதிமன்றத்தில் ஆசிட் வீச்சுக்கு உள்ளான பெண் உயிரிழப்பு