மறைந்த ஆந்திர மாநில முதலமைச்சரும் தெலுங்கு திரையுலகின் உச்ச நடிகருமான என்.டி. ராமாராவின் 100வது பிறந்தநாள் விழா இன்று விஜயவாடாவில் கொண்டாடப்பட்டது. 


என்.டி.ஆர் பிறந்தநாள் விழா:


நடிகர் ரஜினிகாந்த், ஆந்திர பிரபதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளதாக என்.டி.ஆரின் மகனும் பிரபல நடிகருமான பாலகிருஷ்ணா தெரிவித்திருந்தார்.


அதன்படி, என்.டி.ஆரின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக தமிழ்நாட்டில் இருந்து விஜயவாடா சென்ற ரஜினிகாந்துக்கு, விமான நிலையத்தில் நடிகர் பாலகிருஷ்ணா சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஜினிகாந்திற்கு பொன்னாடை அணிவித்து பாலகிருஷ்ணா வரவேற்றார். ரஜினிகாந்தும், அவரை ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினார். 


பூங்கொத்து கொடுத்து வரவேற்ற சந்திரபாபு நாயுடு:


இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மற்றொரு சிறப்பு விருந்தினரான ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ரஜினிக்கு பூங்கொத்து கொடுத்து பொன்னாடை அணிவித்து வரவேற்றார். 


ரஜினிகாந்த். தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


இப்படம் வருகிற ஆகஸ்ட்மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சூழலில், ரஜினிகாந்த், சந்திரபாபு நாயுடுவை சந்தித்துள்ளார்.


ரஜினி அரசியல்:


கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அரசியலுக்கு வரவிருப்பதாகவும், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாகவும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் ரஜினி. ஆனால், உடல் நலம் பாதிக்கப்பட்டதன் காரணமாக அரசியல் கட்சி துவங்கும் முடிவை கைவிட்டதாக பின்னர் அறிவித்தார்.


அரசியலுக்கு வர திட்டமிட்டிருந்த காலத்தில், சந்திரபாபு நாயுடுவிடம் ரஜினி ஆலோசனை கேட்டதாக தகவல் வெளியானது. இருவரும் நெருக்கமான நண்பர்கள் என்றும், இதன் காரணமாக அரசியல் குறித்து ரஜினி சந்திரபாபு நாயுடுவிடம் ஆலோசனை கேட்டிருக்கலாம் என்றெல்லாம் கூறப்பட்டது.


சந்திரபாபு நாயுடுவை பொறுத்தவரையில், கடந்த 1995ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரையிலும் 2014 முதல் 2019 வரையிலும் ஆந்திர மாநில முதலமைச்சராக பதவி வகித்தார். தெலுங்க தேச கட்சியின் தேசிய தலைவரான சந்திரபாபு நாயுடு, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜகவுடன் நல்ல உறவை பேணி வந்தார்.


ஆனால், 2019ஆம் ஆண்டுக்கு பிறகு, பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.