”துணைவேந்தர்களை அரசே நியமிக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் யோசனை செயல்திட்டம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்


தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவை உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். 


உதகமண்டலத்தில் உள்ள ராஜ்பவனில், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் மாநாடு இன்று (ஏப்.25) தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி துணைவேந்தர் மாநாட்டை நடத்திவரும் நிலையில், இந்த மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



குஜராத்தில் தேடுதல் குழு நியமிக்கும் மூவரில் ஒருவரைப் பல்கலைக்கழகத் துணை வேந்தராக மாநில அரசு நியமிக்கிறது. ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் தேடுதல் குழு நியமிக்கும் மூவரில் ஒருவரை மாநில அரசின் ஒப்புதலோடு, ஆளுநர் நியமிக்கிறார்.  அந்த வகையில் தமிழ்நாடு அரசும் இந்த மசோதாவைத் தாக்கல் செய்துள்ளது. ஆளுநர் மட்டுமே துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் பெற்றுள்ள நிலையில், மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டு உயர் கல்வித்துறையின்கீழ் 13 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பல்கலைக்கழகங்களின் தலைமைச் செயல் அலுவலர் என்று கருதப்படும் துணை வேந்தர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். 



துணை வேந்தரை நியமிக்க தமிழக அரசின் உயர்கல்வித் துறையால்தேடல் குழு (Search Committee) ஒன்று அமைக்கப்படும். இந்தக் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி, தமிழக அரசின் பிரதிநிதி, பல்கலைக்கழக நிர்வாகத்தின் பிரதிநிதி என மூன்று பேர் இடம் பெறுவர். ஆளுநரின் பிரதிநிதி தேடல் குழுவின் தலைவராகச் செயல்படுவார். தேடல் குழு பரிந்துரை செய்யும் 3 நபர்களில் இருந்து ஒருவரைத் தமிழக ஆளுநர் துணைவேந்தராக நியமிப்பார். இந்த நடைமுறையின்படிதான் ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் துணை வேந்தர்கள் நியமிக்கப்படுகின்றனர். இப்படியாக இருக்க  துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் பல்கலைக்கழக சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.






இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவை மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில். ”தமிழ்நாட்டில் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட முன்வரைவு தமிழக சட்டப்பேரவையில் இன்று கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. பல்கலைக்கழக நிர்வாகத்தில் தேவையற்ற குழப்பங்களைத் தடுக்க துணைவேந்தர்களை அரசே நியமிக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் யோசனை செயல்திட்டம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai: கை நிறைய சம்பாரிக்க காளான் வளர்ப்பு.. மதுரை மாணவிகள் அசத்தல் !