ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேலம் மாநகரில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சேலம் நகர பேருந்து நிலையம் ஈரடுக்கு பேருந்து நிலையமாக கட்டப்பட்டு வருகிறது. மேலும் பழைய பேருந்து நிலையம் அருகே பெரியார் பேரங்காடி என்ற 6 தளங்கள் கொண்ட வணிக வளாகமும் கலையரங்கம் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று காலை சேலம் நகர பேருந்து நிலையம் மற்றும் பெரியார் வணிக வளாகத்தை திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
92 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு பேருந்து நிலையத்தை பார்வையிட்ட அவர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருமணிமுத்தாறு குறுக்கே அமைய உள்ள பாலம் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதை தொடர்ந்து பேருந்து நிலையம் அருகில் உள்ள நேரு கலையரங்கம், பிரம்மாண்டமான பெரியார் பேரங்காடி வணிக வளாகம் ஆகியவற்றையும் பார்வையிட்ட நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் விட வேண்டும் என்றும் மாநகராட்சிக்கு வருவாய் சேர்க்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அதன்பின் ஏற்காடு சென்ற நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஏற்காடு படகு இல்லத்தை ஆய்வு செய்தார். மேலும் ஏற்காடு சுற்றுலா தலத்தை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிவறைகள் மேம்படுத்துவது, சுற்றுலா பயணிகளை அதிக அளவில் கவரும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது குறித்தும், சாலையோரக் கடைகளை வரைமுறை படுத்துவது தொடர்பாக வியாபாரிகளிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை சென்ற நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, கல்பாரப்பட்டியல் தமிழ்நாடு குடிநீர் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அமைக்கப்பட்டு வரும் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது அமைச்சருடன் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதா தேவி, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் மற்றும் அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.