தமிழக பா.ஜ.க. தலைவராக பொறுப்பு வகிப்பவர் அண்ணாமலை, இவர் தமிழக பா.ஜ.க. தலைவராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு மாற்றங்களை கட்சியில் இவர் எடுத்து வந்தார். சமீபத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்த சி.டி.நிர்மல்குமார் பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்தார். அவரைத் தொடர்ந்து பலரும் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அண்ணாமலைக்கு எதிராக அவர்கள் வைத்த குற்றச்சாட்டுகள் அண்ணாமலைக்கு நெருக்கடியை தந்தது.


ஸ்லீப்பர் செல் அண்ணாமலை:


இந்த நிலையில், அண்ணாமலை நேற்று அளித்த பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பணம் தந்து தேர்தலை சந்திப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றும், தேர்தல் நேரத்தில் மக்களை சந்திக்கும்போது சுத்தமாக இருக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற தேர்தலில் ரூபாய் 120 கோடி வரை செலவு செய்துவிட்டு சுத்தமான அரசியல் செய்ய போவதாக பேச முடியாது என்று பேசினார். வழக்கத்திற்கு மாறான அவரது பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




இந்த நிலையில், தருமபுரி எம்.பி.யும், தி.மு.க.வின் முக்கிய நிர்வாகியுமான செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “ தமிழக பா.ஜ.க.விற்கு எஞ்சியிருக்கும் நிலையையும் மூடிவிடும் இறுதிகட்டத்தில் உள்ள எங்கள் ஸ்லீப்பர் செல் அண்ணாமலை நீடுழி வாழ்க” என்று பதிவிட்டுள்ளார். அவரது பதிவிற்கு கீழே கலவையான கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.


அண்ணாமலை தி.மு.க. மீதும், தி.மு.க. அரசு மீதும் கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்துக் கொண்டிருந்தார். ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் மீது மிக கடுமையான குற்றச்சாட்டுகளையும் பல முறை முன்வைத்துள்ளார். இந்த நிலையில், நேற்று பேட்டி அளித்த அண்ணாமலை, “ எந்த கட்சியையும் குறை சொல்ல அதிகாரம் இல்லை. அந்தந்த கட்சிகள் அவரவர் யுக்தியின்படி நடக்கிறார்கள். தலைவராக இருந்தால் என்ன செய்ய முடியும்? என்ன செய்ய முடியாது? என்ற மனப்பக்குவத்திற்கு வந்துவிட்டேன்.


தேர்தலுக்கு செலவு:


அரசியலில் இந்த பாதையில் பயணிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளேன். இதை மாற்றித்தான் ஆக வேண்டும் என்றால், அப்படிப்பட்ட அரசியலே எனக்கு தேவையில்லை. நாடாளுமன்ற தேர்தலில் ரூபாய் 80 கோடி முதல் ரூபாய் 120 கோடி வரை செலவு செய்ய வேண்டும் என்பது கணக்கு. இப்படி செலவு செய்துவிட்டு சுத்தமான, மாற்று அரசியல் செய்ய போவதாக பேச முடியாது. 9 ஆண்டுகள் நான் சம்பாதித்த பணம் அரவக்குறிச்சி தேர்தலில் போய்விட்டது. தேர்தல் முடிந்த பின் கடனாளியாக உள்ளேன்” என்றார். அண்ணாமலையின் இந்த பேச்சால் அவரது தமிழக பா.ஜ.க. தலைவர் பதவி பறிபோகிறதா? என்று அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.


மேலும் படிக்க:Annamalai: நான் கடன்காரனாக இருக்கிறேன்; முடிவு எடுக்க எனக்கு எந்த அதிகாரமும் இல்லை - அண்ணாமலை


மேலும் படிக்க: நிதி ஒதுக்கீடு செய்யாமல் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்குவது எப்படி..? முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி