புதுச்சேரி : நிதி ஒதுக்கீடு செய்யாமல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்குவது எப்படி? என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.


முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-


புதுச்சேரி சட்டசபையில் ஆளுநர் உரையின்போது "கடந்த ஆண்டு அரசின் சாதனைகளையும், வருகிற நிதியாண்டில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களையும் கோடிட்டுகாட்ட வேண்டும். ஆனால் இனி செய்யப்போகும் திட்டங்கள் குறித்து ஒருவரிகூட கூறப்படவில்லை. முதல்வர்  ரங்கசாமி கடந்த ஆண்டு ரூ.10 ஆயிரத்து 900 கோடி மதிப்பிலான பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கடந்த ஆண்டு எவ்வளவு நிதி செலவிடப்பட்டுள்ளது என்பது கூறப்படவில்லை. ஆனால் கடந்த ஆண்டு ரூ.8 ஆயிரம் கோடி தான் செலவிடப்பட்டுள்ளது. ரூ.2 ஆயிரத்து 900 கோடி செலவிடப்படவில்லை. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில் ரூ.267 கோடி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. சிறப்புக்கூறு நிதி ரூ.166 கோடி செலவிடப்படவில்லை. இந்த பட்ஜெட் ரூ.11 ஆயிரத்து 600 கோடியில் சம்பளம், ஓய்வூதியம், மின்சாரம் வாங்கி என ரூ.9 ஆயிரம் கோடி செலவாகிவிடும். மீதமுள்ள ரூ.2 ஆயிரத்து 600 கோடியில்தான் சாலை போடுவது, குடிநீர், பள்ளிக்கூடம் புனரமைப்பு என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.


கியாஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்குவது நல்ல திட்டம். ஆனால் அது நடைபெறுமா? என்பது சந்தேகமாக உள்ளது. குடிமைப்பொருள் வழங்கல்துறைக்கு கடந்த ஆண்டு ரூ.260 கோடி ஒதுக்கப்பட்டது. அது இலவச அரிசிக்கான பணமாகும். ஆனால் இந்த ஆண்டு ரூ.246 கோடிதான் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்க நிதி ஒதுக்காமல் எப்படி இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும்? தொழில்துறைக்கு கடந்த ஆண்டு ரூ.87.49 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ரூ.74.71 கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்க எப்படி புதிய தொழிற்சாலைகளுக்கு சலுகை வழங்க முடியும்? அரசு பேருந்துகளில்  பெண்களுக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பேருந்துகள் தான் ஓடவில்லை. தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறப்போம் என்றார்கள். ஆனால் இப்போது அதை தனியாரிடம் ஒப்படைப்போம் என்கிறார்கள். பிரதமர் மோடிதான் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்துக்கொடுக்கிறார். அவரது தம்பியாக நமது முதல்வர் உள்ளார்.


புதுவையில் கஞ்சா விற்பனை தாராளமாகிவிட்டது. கலால்துறை ஊழலில் மூழ்குகிறது. காவல்துறை சுற்றுலாபயணிகளிடம் வழிப்பறி செய்கிறது. அதை முதல்வர் வேடிக்கை பார்க்கிறார். உணவகங்களில் பழைய கலப்பட உணவை கொடுக்கிறார்கள். அதை உணவு பாதுகாப்புதுறை கண்காணிக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியின்போது புதுவையின் வளர்ச்சி 11 சதவீதமாக இருந்தது. ஆனால் இப்போது 5 சதவீதமாக குறைந்துவிட்டது. படித்த இளைஞர்களை முதல்வர் ரங்கசாமி மாடு மேய்க்க சொல்கிறார். 10 ஆயிரம் அரசுப்பணியிடங்களை நிரப்புவோம் என்றார்கள். ஆனால் 5 ஆயிரம் அரசுப்பணியிடங்களை மத்திய அரசு ரத்து செய்துவிட்டதாக அரசு ஊழியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.


புதுவை வளர்ச்சிக்கு ஆளுநர், தலைமை செயலாளர், அரசு செயலாளர்கள் தடையாக இருப்பதாக நாங்கள் செல்லும்போது இவர்கள் வேடிக்கை பார்த்தார்கள். தற்போது அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்கிறார்கள். மத்தியிலும், மாநிலத்திலும் உங்கள் ஆட்சிதானே உள்ளது. ஒத்துழைக்காத அதிகாரிகளை மாற்ற வேண்டியது தானே. நாங்களாவது அவர்களை எதிர்த்து போராடினோம். நீங்கள் ஏன் போராடவில்லை. எங்கள் ஆட்சியில் மின்சார கேபிள் புதைத்ததில் முறைகேடு என்றால் விசாரணை நடத்தட்டும். அதேபோல் இப்போது மின்துறை தனியார் மயம், பிரீபெய்டு மின்மீட்டர் கொள்முதல் தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும். பொதுப்பணித்துறை பணிகளுக்கு 13 சதவீத கமிஷன் பெறப்படுகிறது. இவைகள் தொடர்பாக நானும் லஞ்ச ஒழிப்புதுறையில் புகார் அளித்துள்ளேன்” என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார்.