கர்நாடகாவில் மே 10ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள காங்கிரஸ், தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை (பிஎஃப்ஐ) விஷ்வ ஹிந்து பரிஷத்தின் இளைஞர் பிரிவான பஜ்ரங் தளத்துடன் காங்கிரஸ் ஒப்பிட்டு அதையும் தடை செய்வோம் என்று குறிப்பிட்டுள்ளது. கர்நாடகாவில் பெரும் அலையை கிளப்பியுள்ள நிலையில், பிரதமர் மோடி உட்பட பாஜகவினர் பலரை தூண்டியுள்ளது.


காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகள்


"சாதி, மதத்தின் அடிப்படையில் சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கட்சி உறுதிபூண்டுள்ளது. சட்டம் மற்றும் அரசியலமைப்பு புனிதமானது. பஜ்ரங் தள், பிஎஃப்ஐ போன்ற தனிநபர்கள் மற்றும் அமைப்புகளால் அதனை மீற முடியாது என்று நாங்கள் நம்புகிறோம். பெரும்பான்மை அல்லது சிறுபான்மை சமூகத்தினரிடையே பகை அல்லது வெறுப்புணர்வை ஊக்குவிப்பதை காங்கிரஸ் கட்சி தடுக்கும்," என்று, 'சர்வ ஜனங்கத சாந்திய தோட்டா' (அனைத்து சமூகங்களின் அமைதியான தோட்டம்) என்று அழைக்கப்படும் தேர்தல் அறிக்கையில், காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ளது. கர்நாடக சட்டசபைக்கு மே 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது, மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.



கண்கவர் வாக்குறுதிகள்


மேலும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குள், மாநிலத்தில் பாஜக அரசு இயற்றிய "அனைத்து அநீதியான சட்டங்கள் மற்றும் பிற மக்கள் விரோதச் சட்டங்கள்" ரத்து செய்யப்படும் என்றும் உறுதியளித்தது. அதுமட்டுமின்றி க்ருஹ ஜோதி (அனைவருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம்), க்ருஹ லக்ஷ்மி (ஒவ்வொரு பெண் குடும்பத் தலைவருக்கும் மாதந்தோறும் ரூ. 2,000), அன்ன பாக்யா (அவர்கள் விருப்பப்படி 10 கிலோ உணவு தானியங்கள்) என்ற கவர்ச்சியான வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்: LSG vs CSK IPL 2023: லக்னோவில் ராசியில்லாத லக்னோ அணி.. வெற்றியை வசமாக்குமா சென்னை..? யாருக்கு வாய்ப்பு?


உதவித்தொகைகள்


இவை மட்டுமின்றி, குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும், யுவ நிதி (வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 3,000, வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 1,500 மற்றும் வேலையில்லாத பட்டயப் பட்டதாரிகளுக்கு உதவித் தொகை) மற்றும் சக்தி (வழக்கமான KSRTC/BMTC பேருந்துகளில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பெண்களுக்கும் இலவச பயணம்) ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கெல்லாம் மேல் முக்கியமான வாக்குறுதியாக, மாநிலத்தில் தொடர்ந்து ஒன்பது முறை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ஆட்சி அமைக்கும் முதல் நாளில் நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றார்.



பிஎஃப்ஐ தடை


கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, கேபிசிசி தலைவர் டிகே சிவக்குமார், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா ஆகியோர் முன்னிலையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. முன்னதாக, ஏப்ரலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாரதிய ஜனதா கட்சிக்கு (பாஜக) ஒவ்வொரு வாக்களிப்பும் மாநிலத்தை PFI இலிருந்து பாதுகாக்கும் என்று கூறியிருந்தார். மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பரில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் PFI ஐ தடை செய்தது. PFI மற்றும் அதன் துணை நிறுவனங்கள் "நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு பாதகமான" சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவை பொது அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன என்றும் உள்துறை அமைச்சகம் கூறியது. "பொது மனதில் பயங்கரவாத ஆட்சியை உருவாக்க கடந்த காலங்களில் PFI உறுப்பினர்களால் பல குற்றச் செயல்கள் மற்றும் கொடூரமான கொலைகள் செய்யப்பட்டுள்ளன" என்று அது கூறியது குறிப்பிடத்தக்கது.