கர்நாடக மாநிலத்தில் பள்ளிப் பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவனர் ஹெட்கேவாரின் உரையை இடம்பெறச் செய்வதை எதிர்த்துள்ள காங்கிரஸ் தலைவர் சித்தராமய்யா, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உடனடியாக இந்த நடவடிக்கையைக் கைவிட்டு, அறிவுஜீவிகள், கல்வியாளர்கள் முதலானோருடன் கலந்துரையாடி முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் பாடப் புத்தகங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவனர் ஹெட்கேவாரின் உரை இடம்பெறச் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
`மாற்றப்பட்ட பாடத்திட்டம் குறித்த தகவல்கள் உண்மை என்றால், இது மிகவும் முக்கியமான விவகாரம். இந்த விவகாரம் தொடர்பாக மோதல்கள் எழுவதைத் தடுக்க, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும்’ என கர்நாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமய்யா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் பல்வேறு எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள், கல்வியாளர்கள் ஆகியோர் இருப்பதாகக் கூறியுள்ள காங்கிரஸ் தலைவர் பசவராஜ் பொம்மை, பாஜக அரசு கல்விப் பணிகளை ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த அனுபவம் இல்லாதோரிடம் அளித்து மாநிலத்தைச் சேர்ந்த மக்களை அவமதித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர், `தற்போதைய பாடப்புத்தக திருப்புதல் குழுவின் வரைவுகளைப் பின்வாங்குவதோடு, கர்நாடக மாநில அரசு இந்தக் குழுவைக் கலைக்க வேண்டும். கர்நாடகாவைச் சேர்ந்த கன்னட மொழி பேசும் எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள், கல்வியாளர்கள் ஆகியோர் அடங்கிய புதிய குழுவினரை அமைக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.
அரசியல் காரணங்களுக்காக மதத்தின் புனிதத்தன்மையை பாஜக ஏற்கனவே அழித்திருப்பதாகவும் பேசியுள்ள சித்தராமய்யா, `தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக அப்பாவி குழந்தைகளில் மனதில் நஞ்சு விதைக்கும் விதமாக கல்வியில் அரசியல் செய்கிறார்கள். இது தவறானது. மக்கள் இதனைக் கடுமையாக எதிர்க்க வேண்டும். ஹெட்கேவார், கோல்வால்கர், கோட்சே ஆகியோரைப் பாஜக அரசியல் கூட்டங்களில் பயன்படுத்தி வாக்கு வாங்கிக் கொள்ளட்டும். மக்கள் எது சரி, எது தவறு என்பதைத் தேர்வு செய்து கொள்வார்கள். ஆனால் சுயநலத்திற்காக கல்வியில் அரசியல் செய்யாதீர்கள்’ எனவும் தெரிவித்துள்ளார்.
கர்நாடக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பிசி நாகேஷ் ஹெட்கேவாரின் உரையைக் கன்னட பாடப் புத்தகங்களில் இடம்பெற செய்திருப்பதை ஆதரித்துப் பேசியுள்ளார். பாடப் புத்தகங்களில் ஹெட்கேவார் குறித்தோ, ஆர்.எஸ்.எஸ் குறித்தோ பதிவு செய்யவில்லை எனவும், மக்களுக்கு ஊக்கமூட்டும் வகையிலான உரை மட்டுமே இடம்பெற்றிருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தை எதிர்ப்போர் யாரும் பாடப் புத்தகத்தை வாசிக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
பகத் சிங் பற்றிய பாடம் நீக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சைகளுக்கும் பதிலளித்துள்ள அவர், அந்தப் பாடம் நீக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.