இமாச்சல பிரதேசம் தேர்தலையொட்டி அமித் ஷா மேற்கோண்ட பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார்.
கொரோனாவில் இருந்து மீட்டது பாஜக அரசு
இந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அமித்ஷா கொரோனா உடனான போரில் எப்படி வென்றோம் என்பதை குறித்து பேசுகையில், "லட்சக்கணக்கானோரை கொரோனாவில் இருந்து காப்பாற்றியது, நாடு முழுவதும் ஆளுகின்ற பாஜக அரசுதான். நாட்டின் பிரதமர் மோடியின் முயற்சியால், இந்தியாவிலேயே தடுப்பூசி தயாரிக்கப்பட்டு, நாட்டு மக்கள் எல்லோருக்கும் இலவசமாக செலுத்தப்பட்டது. வேறெந்த நாட்டிலும், இதுபோன்ற சாதனையை பார்த்திருக்க முடியாது. இதனால், உலக மக்களே மோடியை பாராட்டுகிறார்கள்", என்றார்.
சுயசார்பு பொருளாதாரம்
மேலும் சுய சார்பு பொருளாதாரம் குறித்து பேசிய அவர், "முன்பு அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்த பொருட்களையெல்லாம், தற்போது நாமே நம் நாட்டில் தயாரிக்கிறோம். மோடி, களைப்பாகாமல நீண்ட நேரம் பணியாற்றக்கூடிய ஆற்றல் உள்ளவர். இது போன்றவர்கள்தான் நாட்டையும், மாநிலங்களையும் ஆள தேவைப்படுகிறார்கள்", என்றார்.
கோவில்களில் கவனம் செலுத்தும் மோடி
பாஜக அரசின் சாதனைகளாக, "370-வது சட்டப்பிரிவை நீக்கியதான் மூலம், காஷ்மீர் மக்களுக்கு அனைத்து வசதிகளையும் கொண்டு சேர்த்தோம். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. 2024-ம் ஆண்டு அந்த கோயில் திறக்கப்படும். பிரதமர் மோடி பக்தியுடையவர் என்பதால், வாரணாசி, கேதார்நாத், பத்ரிநாத், அயோத்தி ஆகியவற்றில் உள்ள இந்து கோவில்களை மறுசீரமைப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார்", என்றார்.
காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல்
காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை பற்றியும் கட்சி பற்றியும் கருத்து கூறிய அவர், "காங்கிரஸ் கட்சி முற்றிலும் பொய்யானவர்களை கொண்டது. பொய் முழக்கங்களை எழுப்பி, மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறது. தேர்தல் முடிந்தால் வாக்குறுதிகளை மறக்கும் கட்சி அது. பாஜக மட்டும்தான் தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றும். காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கும் கப்பல். அந்த கட்சிக்கு எதிர்காலம் ஒன்றும் இல்லை. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும், இந்திய அரசியலில் இருந்தே காங்கிரஸ் காணாமல் போய்விடும். ராகுல்காந்தி, தனது பாதயாத்திரையை காரணமாக வைத்து, பிரச்சாரத்திற்கு வருவதை தவிர்த்து வருகிறார். எதிர்க்கட்சிகளின் தீய நோக்கங்களுக்கு மக்கள் பலியாக வேண்டாம். உங்கள் எதிர்காலம் சீராக வேண்டுமானால், அவர்களை நிராகரியுங்கள்", என்றார்.