ஐஎஃப்எஸ் அதிகாரி ஒருவர் இது என்ன பாம்புன்னு சொல்லுங்க பார்ப்போம் என்று ஒரு பாம்பின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து கேள்வி கேட்க அதற்கு ஆயிரமாயிரம் ருசிகர பதில்கள் குவிந்து வருகின்றன.






பிரவீன் கஸ்வான் என்ற அதிகாரி அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வன உயிரினங்கள் பற்றி பல்வேறு தகவல்களையும் பகிர்வார். அதற்கென தனி ரசிகர் கூட்டமே அவருக்கு உண்டு. அந்த வகையில் அவர் அன்று ஒரு பாம்பின் படத்தைப் பகிர்ந்தார். அதில் அவர் இந்த அழகு..இதை யார் சரியாக கண்டுபிடிக்கிறார்கள் என்று பார்ப்போம் என்று கேப்ஷன் இட்டிருந்தார். அது மட்டுமல்லாது கிங் கோப்ரா எனப்படும் ராஜநாகத்தின் அறிவியல் பெயர் ஓஃபியோஃபேகஸ் ஹனா என்றும் அவற்றின் உணவு முறை மற்ற பெரிய பாம்புகளின் உணவைப் போன்றதே என்றும் கூறியிருந்தார். ஓஃபியோஃபேகஸ் ஹனா என்பது கிரேக்க பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.


அந்தப் படத்தில் இருந்தது ராஜநாகம் தான். இந்தியர்களுக்கு மிகவும் பரிச்சியமான ஜீவராசி என்பதால் அதனை பெரும்பாலும் அனைவருமே சரியாக அடையாளம் கண்டனர். ஆனால் விஷயம் அதுவல்ல. அதற்கு சில ட்விட்டராட்டிகள் சுவாரஸ்யமான பதிலைப் பகிர்ந்திருந்தனர். ஒருவர் அதில், இது யாரோ அரசியல்வாதி என்று பதிவிட்டிருந்தார். இன்னொருவர்.. இதுவும் நிச்சயம் ஒரு மனிதர் தான். சில உறவினர்கள், சில நண்பர்கள் இப்படி இருப்பார்கள் என்றார். இது எனது நண்பர் என்றொருவர் பதிவிட்டிருந்தார்.