தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி  முதலமைச்சர் ஸ்டாலினை இன்று அவரது இல்லத்தில் நேரில்  சந்தித்தார்.சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்துக்கு வந்த மம்தா பானர்ஜியை, வாசலுக்கு வந்து ஸ்டாலின் வரவேற்றார்.


இச்சந்திப்பில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர் கனிமொழி. திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் இருந்தனர்.



அரசியல் சந்திப்பு இல்லை:


இருவருக்கும் இடையேயான சந்திப்புக்கு பிறகு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான், தேர்தல் மற்றும் அரசியல் தொடர்பான சந்திப்பு இல்லை எனத் தெரிவித்தார். 



”ஸ்டாலினை பார்க்காமல் எப்படி செல்வேன்”


பின்னர் பேசிய மம்தா பானர்ஜி, சென்னைக்கு வந்துவிட்டு முதலமைச்சர் ஸ்டாலினை பார்க்காமல் எப்படி செல்வேன். முதலமைச்சர் ஸ்டாலினை சந்திப்பது எனது கடமை.


இரு அரசியல் தலைவர்களும் சந்திக்கும் போது, மாநிலங்களின் வளர்ச்சி குறித்து விவாதிப்பது வழக்கம்தான். மேலும் தேர்தல் தொடர்பாக விவாதிக்கவில்லை எனவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.


எந்தவொரு அரசியல் கட்சிகள் குறித்தும் பேச விரும்பவில்லை, அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை. இது மரியாதை நிமித்தமான மற்றும் சகோதர - சகோதரிகளுக்கு இடையிலான சந்திப்பு.


மேலும், இது அரசியல் ரீதியிலானதா, சமூக ரீதியிலானதா, மற்றும் கலாச்சார ரீதியிலானதா என நீங்களே ஊகித்து கொள்ளுங்கள் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.


ஆளுநர் இல்ல விழா:


மேற்கு வங்க மாநிலத்தின் பொறுப்பு ஆளுநராக உள்ள இல.கணேசனின் அண்ணின் 80 வது பிறந்த நாள் சென்னையில் நடைபெறுகிறது. அதற்காக மேற்கு வங்கம் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு இல.கணேசன் அழைப்பு விடுத்தார்.


அந்த அழைப்பை ஏற்ற மம்தா பானர்ஜி சற்றுமுன் தனி விமானம் மூலம் மேற்கு வங்கத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வந்து அடைந்தார். இதையடுத்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்துக்கு வந்த மம்தா பானர்ஜியை, வாசலுக்கு வந்து ஸ்டாலின் வரவேற்றார். 


நெருங்கும் தேர்தல்:


 வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பாஜகவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் அனைவரும் கூட்டணி அமைக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்து வருகின்றனர்.


காங்கிரஸ் மற்றும் திமுக இடையிலான கூட்டணி வலுவாக உள்ளதாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் இடையிலான கூட்டணி, சற்று இழுபறியாக உள்ளது. இதை, எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதில் உணர முடிந்தது.


மேலும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், தனியாக தேசிய கட்சி தொடங்கி தனிப்பாதையில் பயணிக்கிறார்.


இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு வருகிறார்.


இந்நிலையில் பாஜகவுக்கு எதிராக கூட்டணி கட்சிகள் ஒன்றிணையுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.


ஆனால் ஸ்டாலின் மற்றும் மம்தா இருவருக்கிடையேயான சந்திப்பானது, வரும் தேர்தலில் கூட்டணி குறித்து பேசுவதற்கு சற்று இணக்கமான சூழலை வலுப்படுத்தலாம்.