எனது மனைவி துர்கா, கோயிலுக்கு செல்வது அவர் விருப்பம். அதனை நான் தடுக்க மாட்டேன். தடுக்கவும் விரும்ப மாட்டேன் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முதன்முறையாக வெளிப்படையாக பேசியுள்ளார்.



தனது மனைவி துர்காவுடன் மு.க.ஸ்டாலின்


’துர்கா கோயிலுக்கு செல்வது அவர் தனிப்பட்ட விருப்பம்’


நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த அவர், தினந்தோறும் துர்கா எந்த கோயிலுக்கு செல்கிறார் என்பதை படம் பிடித்து விமர்சிப்பதை சிலர் தொழிலாக கொண்டுள்ளனர் என்றும் கோயிலுக்கு செல்வது அவரது தனிப்பட்ட உரிமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அதோடு, நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்குதான் எதிரியே தவிர, ஆன்மீகத்திற்கு எதிரி அல்ல என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓபனாக பேசியுள்ளார். சமீபத்தில் சனாதனத்தை டெங்கு, மலேரியா போன்று ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சு திமுக ஆன்மீகத்திற்கு எதிரி என்ற பரப்புரைகளுக்கு எதிரான பதிலடியாக அமைந்துள்ளது.


’துர்கா கோயிலுக்கு செல்வதை தடுக்க விருப்பம் இல்லை’


தமிழ்நாட்டில் உள்ள எல்லா கோயிலுக்கும்தான் துர்கா சென்று வருகிறார் என்றும் அது அவரது விருப்பம் என்றும் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அதை தான் தடுக்க விரும்பவில்லை என்றும் தடுக்கத் தேவை இல்லை என்றும் குறிப்பிட்டார். கோயிலும் பக்தியும் அவரவர் விருப்பம், உரிமை என்றும் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், ஏராளமான கோயில் நுழையும் போராட்டங்கள் நடத்தி வெகு மக்களின் உரிமையை பெற்றுத் தந்தது திராவிட இயக்கம் என்றும் தன் பேச்சில் குறிப்பிட்டார்.






பாராசக்தி வசனத்தை பேசிய முதல்வர்


அப்போது, கலைஞர் கருணாநிதி எழுதிய பராசக்தி திரைப்பட வசனமான ‘கோயில் கூடாது என்பதல்ல, கோயில் கொடியவர்களின் கூடாராம் ஆகிவிடக்கூடாது’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதும் அந்த அரங்கில் கூடியிருந்த திமுக சமூக வலைதள பிரிவு நிர்வாகிகள் விசிலடித்து, கைகளை தட்டியும் ஆரவாரம் செய்தனர்.


ஆன்மீகத்தையும் அரசியலையும் மிக சரியாக பகுத்து பார்க்க தெரிந்த பகுத்தறிவாளர்கள்தான் தமிழ்நாட்டு மக்கள் என்று பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக அரசு கோயில்களை இடித்துவிட்டதாக பொய் பிரச்சாரம் பரப்புகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். ஆனால், இதுவரை ஆயிரம் கோயில்களுக்கு மேல் திமுக அரசு குடமுழுக்கு நடத்தியிருக்கிறது என்பதையும் முதல்வர் சுட்டிக் காட்டி பேசினார்.






கோயில் சொத்துக்களை மீட்டது திமுக - முதல்வர் மு.க.ஸ்டாலின்


5 ஆயிரம் கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்களை மீட்டுள்ளோம் என்றும் அதனை அறநிலையத்துறை புத்தகமாகவே வெளியிட்டுள்ளது என்றும் குறிப்பிட்ட ஸ்டாலின், கோயில்களை முறையாக பராமரிப்பது அதனைவைத்து குளிர்காய நினைக்கும் கூட்டத்திற்கு பிடிக்கவில்லை என்றும் விமர்சித்தார்.