மதுரை திருநகர் பகுதியில் செயல்படுகிறது அமலா கான்வென்ட் எனும் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளி. இங்கு ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் அதிகளவு பயின்று வருகின்றனர். பள்ளியில் மாணவர்கள் வீட்டில் இருந்து கொண்டுவரும் குடி தண்ணீர்  போதுமான அளவில்லை என தகவல் கிடைத்தது.


 





இதையடுத்து இந்த பிரச்னை குறித்து மதுரையில் பல்வேறு சமூக பணிகளை செய்துவரும் பசியாற்று நண்பர்கள் டிரஸ்ட் குழுவிற்கு தகவல் அளித். இந்நிலையில் பசியாற்று நண்பர்கள் டிரஸ்ட் அமைப்பு பள்ளியில் கள ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 100 லிட்டர் அளவு கொண்ட ஆர்.ஓ., வாட்டர் பிளாண்டை அமைத்துக் கொடுத்துள்ளனர். இதன் மூலம் ஒரு நாளைக்கு 600 லிட்டர் வரை தண்ணீர் பெற்றுக் கொள்ளமுடியும் எனவும் தெரிவித்தனர். பசியாற்று நண்பர்கள் டிரஸ்ட் அமைப்பு. 6 வருடமாக மதுரையில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் முக்கிய நோக்கமே பசி எனும் நோயை போக்க வேண்டும் என தொடர்ந்து மதுரையில் பல்வேறு இடங்களில் வீடற்ற சாலையோர உறவுகளுக்கு  உணவு வழங்கி வருகின்றனர். தங்களது வாட்சப் குழுவில் உள்ள நண்பர்களிடம் கிடைக்கும் சிறிய தொகையை சிறிது சிறிதாக சேகரித்து தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் போர்கால அடிப்படையில் மதுரை மக்களுக்கு உதவி செய்தனர். தற்போது தொடர்ந்து கல்வி சார்ந்த உதவிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவர்களின் தண்ணீர் தாகத்தை தணிக்கும் வகையில் 42 ஆயிரம் மதிப்பில் ஆர்.ஓ.பிளாண்ட் அமைத்துக் கொடுத்தனர். மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர் - ஆசிரியர்கள் இடையேவும் வரவேற்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.



 

இது குறித்து மாணவர்கள் கூறுகையில், “தினமும் பள்ளிக்கு அரை லிட்டர் தண்ணீர் தான் கொண்டுவர முடியும். அதிகபட்சம் ஒரு லிட்டர் வரை தண்ணீர் கொண்டுவர முடிந்தது. இதனால் மாலை நேரங்களில் கொண்டுவரும் தண்ணீர் தீர்ந்து அதிகளவு தாகம் ஏற்பட்டு படிப்பில் கவனம் செலுத்தமுடியாமல் சிரமப்பட்டோம். இந்த நிலையில் பசியாற்று நண்பர்கள் டிரஸ்ட் உதவி எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதன் மூலம் நாங்கள் வீட்டில் இருந்து அவசியம் தண்ணீர் கொண்டுவர வேண்டும் என்ற சிரமம் தவிர்க்கப்பட்டுள்ளது. எங்களின் பள்ளி சார்பாகவும் மாணவர்கள் சார்பாகவும், பசியாற்றுகள் குழுவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றனர்.