சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நன்றி கூறியுள்ளார். 


கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு சிபிஎஸ்இ 12ஆம் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. தேர்வுகளுக்காக மாணவர்களின் உயிரை பணயம் வைக்கக் கூடாது. தேர்வை ரத்து செய்வதே நல்ல முடிவாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.


இந்நிலையில், சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை வரவேற்ற முன்னாள் முதலமைச்சரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி கூறியுள்ளார்.


சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து - மத்திய அரசு அறிவிப்பு


இதுதொடர்பாக பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மாணவர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு தேர்வு ரத்து முடிவு எடுத்தது வரவேற்கத்தக்கது. சிபிஎஸ்இ வாரிய தேர்வுகளை ரத்து செய்வதன் மூலம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் அச்சங்களுக்கு நியாயமான தீர்மானத்தை கொண்டு வந்துள்ளீர்கள். இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.









சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து குறித்து நேற்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், "நீண்ட விவாதத்திற்கு பிறகு மத்திய அரசு சிபிஎஸ்இ பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யும் முடிவை எடுத்துள்ளது. இது நம் இளைஞர்களின் உடல் நலம் மற்றும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு. தேர்வுகளுக்காக மாணவர்களின் உயிரை பணயம் வைக்கக் கூடாது. எனவே இந்த தேர்வை ரத்து செய்வதே நல்ல முடிவாக இருக்கும்' எனப் பதிவிட்டிருந்தார். 









இதனிடையே, மாநில கல்வித்திட்ட 12ஆம் வகுப்பு தேர்வு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபடுகிறார். இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, பள்ளிக்கல்வித்துறை அமைச்ச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.


தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து? முதல்வருடன் ஆலோசித்த பின் இன்று அறிவிக்க வாய்ப்பு!