தி.மு.க. ஆட்சிக்கு வந்ததை அடுத்து, இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு வருகின்றனர். கடந்த ஆட்சியில் ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த பல அதிகாரிகள் முக்கியத்துவம் உடைய இடங்களில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக இன்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- நிலச் சீர்திருத்தத் துறையின் ஆணையரும் கூடுதல் தலைமைச்செயலர் நிலையில் இருப்பவருமான டாக்டர் ஜக் மோகன் சிங் ராஜு, புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதல் இருப்பிட ஆணையராக, ஹிதேஷ் குமார் மக்வானாவுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை முன்னாள் செயலாளர் எஸ். மதுமதி, ஆதிதிராவிடர் நலத் துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
- உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முன்னாள் ஆணையர் சஜ்ஜன் சிங் சவான், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மீன்வளத் துறை கூடுதல் ஆணையர் பணியிடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
- சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- கடலூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் சந்திரசேகர் சகமூரி, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் இணைச்செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- மதுரை மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர் டி.அன்பழகன், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சர்க்கரை கூடுதல் ஆணையர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
- கல்வித்துறையின் சமக்ர சிக்சா திட்டத்தின் மாநில கூடுதல் இயக்குநராக இருந்த எஸ். அமிர்த ஜோதி, கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் இணைச்செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தருமபுரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் எஸ்.பி.கார்த்திகா, உயர்கல்வித் துறையின் இணைச்செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்திய ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு துறையில் இணைச்செயலராகப் பணியாற்றிவந்த அசிஷ் சட்டர்ஜி, மத்திய அரசுப் பணியை முடித்து, புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் இரண்டாம் இருப்பிட ஆணையராக, அசிஷ் வச்சானிக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் முதன்மைச் செயல் அலுவலரும் துணைத்தலைவருமான டி.கிறிஸ்துராஜ், பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் துணைச்செயலராக, டி.என்.வெங்கடேசுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தமிழ்நாடு மின்விசை நிதிநிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக இருந்த சந்திரகாந்த் காம்ப்ளே, எஸ். கிருஷ்ணன் கூடுதலாக கவனித்துவந்த - திருப்பூர் வட்டார மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண் இயக்குநர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் முன்னாள் மேலாண் இயக்குநர் எம். சுதா தேவி, கே.வி.முரளிதரன் கூடுதலாக கவனித்துவந்த தமிழ்நாடு வாட்டர்செட் மேம்பாட்டு முகமையின் செயல் இயக்குநர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை தலைமைச்செயலாளர் இறையன்பு இன்று பிறப்பித்துள்ளார்.
இந்திய வைரஸிற்கு ‛டெல்டா’ என பெயர் சூட்ட காரணம் இது தான்!