சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை மேற்கொள்கிறார்.
கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு சிபிஎஸ்இ 12ஆம் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. இந்நிலையில், மாநில கல்வித்திட்ட 12ஆம் வகுப்பு தேர்வு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபடுகிறார். இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, பள்ளிக்கல்வித்துறை அமைச்ச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனைக்கு பின் அமைச்சர், சிபிஎஸ்இ தேர்வை பொறுத்தே தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் எனக் கூறினார். சிபிஎஸ்இ தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் பிளஸ் 2 தேர்வு குறித்து அறிவிக்க வேண்டியுள்ளது. இதனால் இன்றைய ஆலோசனைக்கு பின் அது தொடர்பான அறிவிப்ப வெளியாகலாம். பெரும்பாலும், அது மத்திய அரசின் முடிவை ஒட்டிய முடிவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‛மாணவர்களின் எதிர்காலம் போல அவர்களின் உயிரும் முக்கியம்’ -அமைச்சர் அன்பில் மகேஷ்
இதனிடையே, 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுடன் கலந்துரையாடினார். அதன்பின்னர் பிரதமர் மோடியுடன் கல்வித்துறை அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனையின் முடிவில், இந்தாண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த முடிவு தொடர்பாக பிரதமர் மோடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், "நீண்ட விவாதத்திற்கு பிறகு மத்திய அரசு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யும் முடிவை எடுத்துள்ளது. இது நம் இளைஞர்களின் உடல் நலம் மற்றும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு" எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் இதுகுறித்து தெளிவாக விவாதித்துள்ளனர். அதில் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகிறது. சில மாநிலங்களில் கொரோனா பரவல் காரணமாக இன்னும் ஊரடங்கு நீடிக்கிறது. எனவே இந்தச் சூழலில் மாணவர்களை கட்டாயப்படுத்தி தேர்வு எழுத வைக்க முடியாது என்று ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டை போல் இம்முறையும் மாணவர்கள் சிலர் தேர்வு எழுத விரும்பினால் அவர்களுக்கு நிலைமை சரியான பிறகு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து - மத்திய அரசு அறிவிப்பு
அத்துடன் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க உரிய அறிவிப்பை விரைவில் கல்வித்துறை அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, "தேர்வுகளுக்காக மாணவர்களின் உயிரை பணயம் வைக்கக் கூடாது. எனவே இந்த தேர்வை ரத்து செய்வதே நல்ல முடிவாக இருக்கும்" எனக் கூறியுள்ளார்.