பிரதமர் மோடி குறித்து ராகுல்காந்தி தெரிவித்த கருத்தால் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்களை எதிர்க்கட்சிகளும், காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும் தெரிவித்து வருகின்றனர்.


கருப்பு உடை அணிந்தது ஏன்?


இந்த நிலையில், ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று தமிழ்நாடு சட்டசபைக்கு வந்த காங்கிரஸ் கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்திருந்தனர். அதேசமயம், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வான வானதீ சீனிவாசனும் கருப்பு நிற சேலையில் பேரவைக்கு வந்தார்.


இதுதொடர்பாக, பேரவையின் கேள்வி நேரத்தின்போது அவரிடம் சபாநாயகர் அப்பாவு காங்கிரசார்தான் யூனிபார்மில் வந்துள்ளார்கள். நீங்களும் அதே யூனிபார்மில் வந்ததுபோல தெரிகிறதே? என்று கேட்டார். அதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த வானதி சீனிவாசன், “தமிழ்நாட்டில் எமர்ஜென்சி காலத்தின்போது எப்படியெல்லாம் ஆளுங்கட்சியினர் சிரமப்பட்டனர் என்பதை நினைவூட்டவே நான் கருப்பு உடையில் வந்தேன்”  என்று பதிலளித்தார்,  


ராகுல்காந்தி விவகாரம்:


மேலும், இதைத்தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன் சட்டசபையிலே காகிதம் இல்லா பேரவையாக சென்று கொண்டிருக்கிறோம். ஆனால், இன்றும் கேள்வி நேரத்திற்கு காகிதங்களை பயன்படுத்துகிறோம். அதனால் வாட்ஸ் அப் வாயிலாக உறுப்பினர்கள் கேள்வி கேட்க அனுமதிக்குமாறு கேட்கிறோம் என்றார். அவரது கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மனோ தங்கராஜ் எதிர்காலத்தில் நிச்சயமாக செய்யப்படும் என்றார். மேலும், இந்த கேள்வி சட்டசபை தொடர்பான கேள்வி என்பதால் படிப்படியாக செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவுவும் பதிலளித்தார்.


ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், ராகுல்காந்திக்கு ஆதரவாக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் பா.ஜ.க. அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தி.மு.க. எம்.பி.க்களும் கருப்புச்சட்டை அணிந்து வந்தனர். மேலும், தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். 


இந்த விவகாரம் தொடர்பாக, ராகுல்காந்தி நான் யாருக்கும் அஞ்சவும் மாட்டேன். சிறைக்கு சென்றாலும் பரவாயில்லை. பிரதமர் மோடி கண்களில் பயம் தெரிகிறது என்று பதிலளித்திருந்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே மட்டுமே உள்ள நிலையில், பா.ஜ.க.வும் காங்கிரசும் தங்களது தேர்தல் வியூகத்தை வகுத்து வரும் நிலையில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி விவகாரத்தின் தாக்கம் கடுமையாக எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க: Chennai Corporation Budget 2023 : ’இன்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்’ - அண்ணா, கலைஞருக்கு முழு உருவச் சிலைகள்..?


மேலும் படிக்க: Kushboo: 'மோடி என்பவர்கள் எல்லாம் ஊழல்வாதிகள்..' வினையாக மாறிய பழைய ட்வீட்...புதிய சிக்கலில் குஷ்பூ..