கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது மோடி குறித்து ராகுல்காந்தி தெரிவித்த கருத்து அவரின் அரசியல் வாழ்க்கையையே புரட்டிபோட்டுள்ளது. அவதூறாக பேசியதாகக் கூறி, ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்துள்ளது சூரத் நீதிமன்றம்.  இந்த விவகாரம், இந்திய அரசியலில் புயலை கிளப்பியுள்ள நிலையில், ராகுல் காந்திக்கு ஆதரவாக பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


குஷ்பு போட்ட பழைய ட்வீட்:


இச்சூழலில், அதே மோடி குறித்து கடந்த 2018ஆம் ஆண்டு நடிகை குஷ்பூ போட்ட ட்வீட் அவரின் அரசியல் வாழ்க்கைக்கு வினையாக மாறியுள்ளது.


அப்போது, காங்கிரஸ் கட்சியில் இருந்த குஷ்பூ, "எங்கே பார்த்தாலும் மோடி என்ற பெயர்தான் வைத்திருக்கிறார்கள். அந்த பெயரை வைத்துள்ளவர்கள் அனைவரும் ஊழலில் ஈடுபட்டுள்ளார்கள். எனவே, மோடி என்ற பெயருக்கான அர்த்தத்தை ஊழல் என மாற்றிவிடுவோம். காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, மோடி குறித்து குஷ்பூ வெளியிட்ட ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. ராகுல் காந்தி பேசியது அவதூறு என்றால் குஷ்பூ பேசியதும் அவதூறுதான் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். 


வெட்கப்படவில்லை என குஷ்பு விளக்கம்:


இந்நிலையில், தன்னுடைய பழைய ட்வீட் குறித்து விளக்கம் அளித்துள்ள குஷ்பூ, "என்னுடைய பழைய ட்வீட்டை பற்றி காங்கிரஸ் கட்சி பேசுவது அவர்கள் எவ்வளவு அவநம்பிக்கையோடு இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.


காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது மோடி குறித்து ட்வீட் போட்டதற்கு நான் வெட்கப்படவில்லை. அப்போது, எந்த கட்சியில் இருந்தேனோ அதன் தலைவர் மற்றும் அந்த கட்சியின் மொழியை பேசினேன்" என்றார்.


கடந்த 2020ஆம் ஆண்டு, குஷ்பூ காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். கடந்த 2021ஆம் ஆண்டு, சட்டப்பேரவை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். பின்னர், தேசிய செயற்குழு உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டார்.


இதையடுத்து, சமீபத்தில்தான், அவர் தேசிய பெண்கள் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தேசிய பெண்கள் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதில் இருந்து காங்கிரஸ் கட்சியையும் ராகுல்காந்தியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். 


ராகுல் காந்தி திட்டம்:


பதவி நீக்க விவகாரத்தில், சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்காக ராகுல் காந்திக்கு 30 நாள்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ராகுல் காந்தி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. 


மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், பிரிவு 8(3)இன் கீழ், எம்பி ஒருவருக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் குற்ற தண்டனை விதிக்கப்படும் பட்சத்தில், அவர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார். தற்போதைக்கு, ஜலந்தர் மற்றும் வயநாடு தொகுதிகள் காலியாக உள்ளன.