2023 – 24ஆம் ஆண்டிற்காக நிதி நிலை அறிக்கையை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இன்று தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யப்போகும் 2வது பட்ஜெட் இது. பட்ஜெட் தாக்கலின்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகளை மேயர் பிரியா வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



மேயர் பிரியா


கடந்த ஆண்டை காட்டிலும் கூடுத்ல் திட்டங்கள்


கடந்த் 2022 – 23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை கடந்த ஆண்டு தாக்கல் செய்த மேயர் பிரியா, பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் வழங்கப்படும் காலை சிற்றுண்டித் திட்டத்தை விரிவுப்படுத்துதல் உள்ளிட்ட அவரின் அறிவிப்புகள் பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுத் தந்தது. இந்நிலையில், இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதல் திட்டங்களை அறிவித்தும், புதிய, கவர்ச்சிகரமான அறிவிப்புகளை பிரியா வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.


கடந்த ஆண்டு 67 இந்த ஆண்டு 75 ? 


கடந்த பட்ஜெட்டில் 67 அறிவிப்புகளை வெளியிட்ட மாநாகராட்சி மேயர் பிரியா இந்த ஆண்டு பட்ஜெட்டில் 70க்கும் மேற்பட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவர் என ரிப்பன் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டமான சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி, அந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்தி முடிப்பதற்கான அறிவிப்புகளை பிரியா இந்த பட்ஜெட்டில் வெளியிடுவார் என கூறப்படுகிறது.


மேலும், சென்னை முழுவதும் வரும் மழை காலத்தில் மழை நீர் தேங்காத வகையில், மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிப்பது, போக்குவரத்து நெரிசலான உள்ள பகுதிகளில் மேம்பாலங்கள் அமைப்பது, கொரோனா தொற்று மீண்டும் பரவி வரும் நிலையைல், சுகாதார பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது உள்ளிட்டவைகளுக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது.


உயரும் கவுன்சிலருக்கான வார்டு வளர்ச்சி நிதி ? 


சென்னை மாநகராட்சி கவுன்சிலருக்கு வழங்கப்பட்டு வரும் வார்டு வளர்ச்சி நிதி 35 லட்சம் ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ள நிலையில், இந்த பட்ஜெட்டில் வார்டு வளர்ச்சி நிதி 35 லட்சத்தில் இருந்து 45 லட்சமாக உயர்த்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.




அண்ணா, கலைஞருக்கு முழு உருவ சிலை ? 


தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா வரும் ஜூன் 3ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அவருக்கும் திமுக நிறுவனரான பேரறிஞர் அண்ணாவிற்கு முழு உருவச் சிலைகள் அமைப்பது குறித்த அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.


உள்ளாட்சித் துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்த இருவருக்கும் சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்திலேயே முழு உருவச் சிலைகள் அமைக்கப்பட்டு, அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என்றும் மேயர் பிரியா தனது அறிவிப்புகளின்போது பேசுவார் என தெரிகிறது.


நாளை பட்ஜெட் மீதான விவாதம் 


இன்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை வரி விதிப்பு, நிதி நிலைக்குழுத் தலைவர் சர்பஜெயதஸ் நரேந்திரன் தாக்கல் செய்த பிறகு, பட்ஜெட்டில் உள்ள முக்கியமான அறிவிப்புகளை மேயர் பிரியா வெளியிட்டு பேசுவார். அதன்பிறகு, நாளை முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். இதில், கட்சி வாரியாக மாநகராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்று பேசுவார்கள்.


பிறகு, பட்ஜெட் மீதான விவாதத்தில் பதிலளித்து மேயர் பிரியா உரை நிகழ்த்தி பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடையும்.