ஊடகத் துறையினரை இழிவுபடுத்தும் வகையில் வகையில் பேசிய  பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையில் அநாகரிகமானது என்று  தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.


சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஊடகத்துறையினரை அவமதிக்கும் வகையில் பேசியிருந்தார். இதற்கு தி.மு.க. கட்சியின் செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக டி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:


’ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடிக்கிறது’ என்று தமிழிலே ஒரு சொலவடை உண்டு. அது தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு முழுப் பொருத்தமாக இருக்கிறது. அரசியலில் மாற்றுக் கருத்து கொண்டவர்களை அநாகரிகமாகவும் தரம் தாழ்ந்த வகையிலும் பேசுவது பா.ஜ.க. நிர்வாகிகள் பலரது வழக்கமாக இருப்பதை ஊடக விவாதங்களில் பங்கேற்கும் கருத்தாளர்களும் பார்வையாளர்களும் நன்கு அறிவார்கள். கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருக்கும் அண்ணாமலை அந்த அநாகரிகப் படிக்கட்டுகளில் இன்னும் ஒரு படி மேலே சென்று, ஊடகத்தினர் மீது தொடர்ந்து பாய்ச்சலை நடத்திக் கொண்டிருக்கிறார்.


ஊடகச் சந்திப்புகளில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறும் பா.ஜ.க. நிர்வாகிகள், அத்தகைய கேள்வி எழுப்புவோரை நோக்கி, ஆன்ட்டி-இண்டியன் என்றும் கெட்-அவுட் என்றும் கொச்சைப்படுத்துவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள், ஊடகத்தினருக்கு 'ரேட்' போடுவதும், ஏலமிடுவதுமாக பல முறை இழிவுபடுத்தியிருக்கிறார்.


இன்று மாநிலம் தழுவிய அளவில் விளம்பரம் தேடும் ஆர்ப்பாட்டம் நடத்திய அண்ணாமலையிடம் ஊடகத்தினர் கேள்விகள் கேட்டபோது, “மரத்து மேல குரங்கு தாவுற மாதிரி சுத்தி சுத்தி வரீங்களே” என்று மிக மோசமான சொற்களால் வர்ணித்ததுடன், “உங்களைச் சாப்பிட சொல்லிட்டுத்தானே போனேன்” என்று ஊடகத்தினரின் சுயமரியாதையை சுண்டிப் பார்க்கும் வகையில் மேலும் மேலும் கொச்சைப்படுத்தியிருக்கிறார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கு வக்கின்றி, நாய்.. பேய்.. என்று ஆளுந்தரப்பை விமர்சித்துள்ளார்.


 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசும்போது, பா.ஜ.க.வினர் எந்தளவுக்குத் தரம் தாழ்ந்து செயல்படுவார்கள் என்பதை எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டியதை இங்கு நினைவு கூர்கிறேன். அரசியல் கட்சிகளிடம் மட்டுமின்றி, ஊடகத்தினரிடமும் தரம் தாழ்ந்து பேசும் அண்ணாமலையின் தொடர்ச்சியான வாய்ச் சவடால் மூலமாகத் தமிழ்நாட்டின் அரசியல் பண்பாட்டைச் சிதைத்துச் சீரழிக்கும் வேலையை பா.ஜ.க மேற்கொண்டு வருகிறது. ஊடகத்தினரை இழிவுபடுத்திய பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்குத் தி.மு.கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், தன் செயலுக்காக ஊடகத்தினரிடம் அவர் வருத்தம் தெரிவித்து, இனியாவது நாகரிகமும் பண்பாடும் காத்திட வலியுறுத்துகிறேன்.




மேலும் வாசிக்க..


Yashoda Trailer: வாடகைத்தாயாக சமந்தா.. வெளியான யசோதா ட்ரெய்லர்.. விறுவிறு வீடியோ இதோ..