காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்ட 47 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை நியமித்துள்ளார்.


 கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இதையடுத்து இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து, முழுநேர தலைவரை தேர்வு செய்தால் கட்சி பலப்படும் என கருத்து பரவலாக கட்சி நிர்வாகிகளிடையே பேசப்பட்டு வந்தது. அதனால் முழு நேர தலைவரை தேர்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. சோனியா காந்தி குடும்ப ஆதரவு பெற்ற வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கேவும் மூத்த தலைவர் சசி தரூரும் போட்டியிட்டனர்.


இதில் 7,897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே வெற்றி  பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசி தரூர் 1,000 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் தலைவராக தேர்வு பெற்று மல்லிகார்ஜுன கார்கே வரலாறு படைத்தார். டெல்லி மாநிலத்தில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் நேற்று மல்லிகார்ஜுன கார்கே  கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். தலைவராக பதவியேற்ற கையோடு, காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு, வழிகாட்டு குழுவை அமைத்தார்.


47 பேர் கொண்ட வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டு அது தொடர்பான அறிவிப்பு வெளியானது. அந்த குழுவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மூத்த தலைவர்களான ஏ.கே. அந்தோணி, அம்பிகா சோனி, ஆனந்த் சர்மா, கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், அஜய் மக்கான், ஹரிஷ் ராவத், அபிஷேக் சிங்வி, ரன்தீப் சுர்ஜிவாலா உள்ளிட்டவர்களும் வழிகாட்டும் குழுவில் இடம் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து ப.சிதம்பரம், டாக்டர் ஏ.செல்லகுமார், மாணிக்கம் தாகூர் ஆகிய 3 பேரும் இடம் பெற்றுள்ளனர்.


பா. சிதம்பரம்: சட்டப் பயிற்சி மேற்கொண்டு உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதி மன்றத்தில் பணியாற்றினார். இப்படிச் சட்டப் பணிகளில் ஒரு பக்கம் பயணித்துக் கொண்டிருக்க, அரசியலில் மெல்ல வளரத் தொடங்கினார். 1984-ல் காங்கிரஸ் கட்சி சார்பில், முதல் முறையாக சிவகங்கை தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். 1986-ல் ராஜிவ் காந்தி தலைமையிலான அரசில் மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார். பின் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக பதவியில் இருந்தார். அந்த காலங்களில் இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளில் பல முக்கியமான கொள்கை முடிவு மாற்றங்களைக் கொண்டு வந்தார். மேலும் அவர் பதவியில் இருந்த போது பல்வேறு மாற்றங்களை அமல்படுத்தினார்.


 


டாக்டர் ஏ. செல்வகுமார்: காங்கிரஸ் கட்சியில் மாநில காங்கிரஸ் தலைவர், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர், கோவா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் போன்ற பதவிகளை வகித்துள்ளார். முதன்முதலில் இவர் 1991 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக அண்ணாநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், மீண்டும் கிருஷ்ணகிரி தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


மாணிக்கம் தாகூர்: மாணிக்கம் தாகூர்  நாடாளுமன்ற உறுப்பினர் ஆவர். இவர் 2009 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், விருதுநகர் தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2014 ஆம் ஆண்டு தேர்தலில், இதே விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் தேர்தலில் அதிமுக வேட்பாளரான இராதாகிருஷ்ணனிடம் தோல்வியடைந்தார்.