சமந்தா நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் ’யசோதா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லரை தமிழில் நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.


வாடகைத் தாயாக இருக்கும் சமந்தா எதிர்கொள்ளும் சவால்களை மையப்படுத்தி, சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது.






இக்கதையில் கடுமையான மருத்துவக் குற்றங்களை தைரியத்துடன் சமந்தா வெளிப்படுத்தும் வகையிலான காட்சிகளும் வசனங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், ஷத்ரு, மாதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபடா, பிரியங்கா ஷர்மா மற்றும் பல நடிகர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


மணிசர்மா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிப்பில் ஹரிஹரிஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். வரும் நவம்பர் 11ஆம் தேதி ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகிறது. 


படத்தின் ட்ரெய்லரை தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் முறையே விஜய் தேவரெகொண்டா, ரக்‌ஷித் ஷெட்டி, துல்கர் சல்மான், வருண் தவான் ஆகிய நடிகர்கள் வெளியிட்டுள்ளனர். 


 






முன்னதாக சமந்தா இப்படத்துக்காக ரத்தமும் வியர்வையும் சிந்தி நடித்தார் எனத் தயாரிப்பாளர் நெகிழ்ச்சியுடன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தது கவனத்தை ஈர்த்தது. மேலும் பெரிய பட்ஜெட்டில் 100 நாள்களில் படப்பிடிப்பை முடித்ததாகவும், தமிழிலும் தெலுங்கிலும் சமந்தாவே படத்துக்கு டப்பிங் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.