பெரும் சட்டப் போராட்டத்திற்கு பிறகு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் சிறையில் இருந்து இடைக்கால பிணையில் வெளியாகி நேற்று தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். இந்த நிலையில், இன்றைய செய்தியாளர் சந்திப்பில், அவரிடம் பல முக்கியமான கேள்விகள் கேட்கப்பட்டன.


INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா கெஜ்ரிவால்?


அந்த வகையில், INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா கெஜ்ரிவால் என அவரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "நான் பிரதமர் வேட்பாளர் இல்லை" என்றார். தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சியின் வாக்குறுதிகளும் இன்று வெளியிடப்பட்டன.


வாக்குறுதிகள் குறித்து பேசிய கெஜ்ரிவால், "இந்த 10 உத்தரவாதங்களும் புதிய இந்தியாவுக்கான தொலைநோக்கு பார்வை. இவற்றில் சில பணிகள் கடந்த 75 ஆண்டுகளில் செய்யப்பட்டிருக்க வேண்டியவை. ஆனால், செய்ய முடியவில்லை.


சில பணிகள் இன்றி நாட்டை வல்லரசாக மாற்ற முடியாது. இப்பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும். மோடியின் உத்தரவாதங்களை நம்ப வேண்டுமா? அல்லது கெஜ்ரிவாலின் உத்தரவாதங்களை நம்ப வேண்டுமா? என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.


ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்:


முந்தைய தேர்தலுக்கு முன்னதாக அறிவித்த அனைத்து உத்தரவாதங்களையும் நாங்கள் நிறைவேற்றிவிட்டோம். அடுத்த ஆண்டு மோடி ஓய்வு பெறுவார். அதன் பிறகு அவரது உத்தரவாதத்தை யார் நிறைவேற்றுவார்கள் என்பதில் தெளிவு இல்லை.


ஆனால், கெஜ்ரிவால் இங்கேயே இருக்க போகிறார். எனவே கெஜ்ரிவாலின் உத்தரவாதங்கள் நிறைவேற்றப்படுவதை நான் உறுதி செய்வேன்" என்றார். வாக்குறுதிகளை பட்டியலிட்ட அவர், "24X7 மின்சாரம் வழங்கப்படும். நல்ல கல்வி மற்றும் சுகாதார வசதிகள் வழங்கப்படும்.


இளைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்க தரப்படும். பஞ்சாப் மற்றும் டெல்லியில் 24x7 மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதில் நாங்கள் பணியாற்றினோம். நாடு முழுவதும் அதைச் செய்யலாம்.


நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் மோசமான நிலையில் உள்ளன. நாடு முழுவதும் நல்ல தரமான கல்வியை நாங்கள் ஏற்பாடு செய்வோம். அதை எப்படி செய்வது என்பது எங்களுக்குத் தெரியும்" என்றார். நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கெஜ்ரிவால் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார்.


"ஒரே தேசம், ஒரே தலைவர்" என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கியுள்ளதாகவும் அவர் விரைவில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருவார் என்றும் கெஜ்ரிவால் குற்றம் சுமத்தியிருந்தார்.


இதையும் படிக்க: "ஸ்டாலின், பினராயி விஜயனுக்கு சிறை! பா.ஜ.க. போடும் ப்ளான்" பகீர் கிளப்பிய கெஜ்ரிவால்