டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக சிறையில் இருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று விடுதலையான நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "எதிர்க்கட்சி தலைவர்களை மட்டுமல்ல, சொந்த கட்சி தலைவர்களையும் பாரதிய ஜனதா கட்சி சிறையில் தள்ளும்.

"மோடியின் அடுத்த டார்கெட் யோகி ஆதித்யநாத்தான்" 

"ஒரே தேசம், ஒரே தலைவர்" என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கியுள்ளார். அவர் விரைவில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருவார்" என கூறியுள்ளார்.

தொடர்ந்து விரிவாக பேசிய அவர், "அத்வானி, முரளி ஜோஷி, சிவராஜ் சிங் சவுகான், வசுந்தரா ராஜே, கட்டார், ராமன் சிங் ஆகியோரின் அரசியல் முடிந்துவிட்டது. அடுத்து, யோகி ஆதித்யநாத்தான். அவர் (பிரதமர் மோடி) வெற்றி பெற்றால், இரண்டு மாதங்களில் உ.பி முதல்வரை மாற்றி விடுவார்.

நமது நாடு மிகவும் பழமையானது. எப்போதெல்லாம் ஒரு சர்வாதிகாரி ஆட்சி செய்ய முயன்றாரோ, அப்போதெல்லாம் மக்கள் அவரை வேரோடு பிடுங்கி துடைத்தெறிந்தனர். இன்று மீண்டும் ஒரு சர்வாதிகாரி ஜனநாயகத்தை ஒழிக்க நினைக்கிறார். 140 கோடி மக்களிடம் கெஞ்சி கேட்டு கொள்கிறேன்.

"ஸ்டாலினை எல்லாம் சிறைக்கு அனுப்பிடுவாங்க"

மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் எதிர்க்கட்சித் தலைவர்களான மம்தா பானர்ஜி, மு.க. ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ், பினராயி விஜயன், உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "எங்கள் ஆம் ஆத்மி கட்சி இரண்டு மாநிலங்களில் மட்டுமே உள்ள ஒரு சிறிய கட்சி. ஆனால், பிரதமர் எங்கள் கட்சியை நசுக்குவதற்கு எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறார். ஒரே நேரத்தில் கட்சியின் நான்கு தலைவர்களை சிறைக்கு அனுப்பினார்.

பெரிய கட்சிகளின் நான்கு முக்கிய தலைவர்கள் சிறைக்கு சென்றால், கட்சியே முடிந்துவிடும். ஆம் ஆத்மியை நசுக்க பிரதமர் நினைக்கிறார். ஆம் ஆத்மி கட்சிதான் நாட்டிற்கு எதிர்காலத்தை தரும் என பிரதமர் மோடியே நம்புகிறார்" என்றார்.

 

தேர்தல் நெருங்கும் சூழலில், ஆம் ஆத்மி கட்சி பெரும் நெருக்கடியை சந்தித்து வந்தது. பெரிய சட்டப்பேராட்டத்திற்கு பிறகு, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால பிணை கிடைத்தது. வரும் ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கியுள்ள உச்சநீதிமன்றம், அவரை வரும் ஜூன் 2ம் தேதி நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டது.