பா.ஜ.க. பெண் தலைவரை மத்திய பிரதேச காங்கிரஸ் மாநில தலைவர் ஜிது பத்வாரி விமர்சித்ததற்கு எதிராக அவரின் வீட்டின் வெளியே பா.ஜ.க. மகளிர் அணியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், இந்து மத கடவுள்களின் போஸ்டர்களை காங்கிரஸ் தொண்டர்கள் கிழித்தது போன்று இந்த தகவல் பரப்பப்பட்டது.


பரப்பப்படும் வீடியோ உண்மையானதா?


வரும் 13ஆம் தேதி நடக்கும் நான்காம் கட்ட மக்களவை தேர்தலில் மத்திய பிரதேசத்தில் உள்ள 13 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது. எதிர்க்கட்சிகளை குறிப்பாக காங்கிரஸ் கட்சியை இந்துக்களுக்கு எதிரான கட்சி என பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தேர்தல் பரப்புரைகளில் விமர்சித்து வருகின்றனர்.


இப்படிப்பட்ட சூழலில், வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவின் கேப்ஷன் பின்வருமாறு, "ஜெய் ஸ்ரீ ராம். காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இந்துக் கடவுள் மற்றும் சனாதன மதத்தின் கடவுள் மீது காலணியுடன் நடனமாடுகின்றனர்.


65 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதன் அர்த்தத்தை இந்து மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். நான் ஒரு சனாதன இந்து. நான் இறந்தால் கூட நானும் எனது குடும்பமும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க மாட்டோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே வீடியோ, இந்த தவறான கூற்றுடன் பேஸ்புக்கில் பரவலாக பகிரப்படுகிறது. 


உண்மை என்ன?


பாஜக பெண் தலைவர் இமார்தி தேவிக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரியின் இல்லத்திற்கு வெளியே பாஜகவின் மகிளா மோர்ச்சா பிரிவு ம.பி.யில் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த வீடியோவை, தவறான தகவல்களுடன் தற்போது வைரலாக்கப்பட்டு வருகிறது. இதை, பூம் செய்தி இணையதளம் கண்டறிந்துள்ளது.




அந்த வீடியோவில், பாஜக சால்வை அணிந்த பெண்கள் பேனர் மீது நிற்பது பதிவாகியிருந்தது. எனவே, இதனை அடிப்படையாக வைத்து, "bjp woman workers tearing posters" என்ற கீ வேர்ட்ஸை கூகுளில் போட்டு தேடினோம். அப்போது, இந்த காட்சிகளுடன் Free Press Journal செய்தி வெளியிட்டது தெரிய வந்தது.


முன்னாள் அமைச்சரும் பாஜக முக்கிய தலைவருமான இமார்தி தேவி குறித்து அநாகரீகமான கருத்துகளை தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மகிளா மோர்ச்சா பிரிவைச் சேர்ந்த பெண்கள் இந்தூரில் உள்ள காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜிது பட்வாரியின் இல்லத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


 






அந்த செய்தியில் ஒரு எக்ஸ் பதிவும் இணைக்கப்பட்டிருந்தது. அந்த எக்ஸ் பதிவில், "பாஜக மகிளா மோர்ச்சாவின் வெட்கக்கேடான செயலைப் பாருங்கள். காங்கிரஸின் மீதான வெறுப்பில் பகவான் ஸ்ரீ ராமச்சந்திரா மற்றும் ஹனுமான் ஆகியோரின் படங்களைக் கூட அவர்கள் காலடியில் மிதிக்கிறார்கள்" என குறிப்பிடப்பட்டிருந்தது.


தான் தெரிவித்த கருத்துக்கு மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி, கடந்த 3ஆம் தேதி மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.




பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக BOOM என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை தமிழில் மொழிபெயர்த்து எழுதியுள்ளது.