ஆந்திராவின் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகிப்பவர் பிரபல நடிகை ரோஜா. இவர் இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு, அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,


“என்னுடைய தொகுதிக்குட்பட்ட சில விவகாரங்கள் குறித்து பேசுவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வந்தேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகவும் அன்பாக, நட்பாக பேசினார். நான் அளித்த கோரிக்கைகள் அனைத்தையும் பார்த்துவிட்டு, கூடிய விரைவில் இவை அனைத்தும் செய்து வைக்கிறேன் என்று அவர் கூறினார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆந்திர- தமிழக எல்லையில் உள்ள மாணவர்கள் பலரும் தமிழ் மீடியத்தின் கீழ் பயின்று வருகின்றனர். ஒவ்வொரு பள்ளிக்கும் 1000 தமிழ் பாடத்திட்ட புத்தகங்கள் தேவைப்படுகிறது.


ஒவ்வொரு ஆண்டும் இங்கிருந்து புத்தகங்கள் வாங்கி அங்கே கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். இந்தாண்டும் மு.க.ஸ்டாலினிடம் புத்தக கோரிக்கையை வைத்தேன். அவர் உடனடியாக புத்தகங்களை அனுப்பி வைக்கிறேன் என்றார். எனது தொகுதியில் உள்ள விஜயபுரம் தமிழ்நாடு எல்லையில் உள்ளது. திருத்தணி தாலுகா அதன் அருகில் உள்ளது. ஆந்திர பிரதேசத்தின் சார்பில் தொழிற்சாலை அமைக்க 5 ஆயிரம் ஏக்கர் கையகப்படுத்தப்பட்டுள்ளது.




இதற்காக நெடும்பரம் – அரக்கோணம் சாலை அமைக்க வேண்டும். இதற்காக தமிழ்நாட்டில் 9 சதவீத ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இந்த சாலை அமைத்தால்தான் தமிழ்நாட்டில் இருந்து வர வேண்டிய கனரக வாகனங்கள் வர ஏதுவாக இருக்கும். விமான நிலையமும், துறைமுகமும் அருகருகே இருப்பதால் அந்த பகுதியில் தொழிற்சாலை அமைக்க அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.


மேலும் படிக்க : ’முதலமைச்சர் ஸ்டாலின் பாஜகவை எதிர்த்து தான் அரசியல் செய்கிறார்’ - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு


இந்த கோரிக்கையை முன்வைத்து நீண்டநாட்கள் ஆகிவிட்டது. இதனால், நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம். ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். என்னோட தொகுதியில் உள்ள தமிழ் தெரிந்த மக்கள் சென்னைக்குதான் சிகிச்சைக்காக வருகிறார்கள். அவ்வாறு அவர்கள் வரும்போது சில நேரங்களில் அனுமதிக்கின்றனர். சில நேரங்களில் அனுமதிக்க மறுக்கின்றனர்.




தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு என்னென்ன சலுகைகள் அளிக்கப்படுமோ, அதே சலுகைகள் அவர்களுக்கும் அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளேன். கொரோனா பெருந்தொற்று காலம் முடிவடைந்த பிறகு, அந்த சலுகைகள் நிறைவேற்றித் தருவதாக அவர் உத்தரவாதம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள தறிநெசவுத் தொழிலாளர்கள் கொரோனா காலத்தில் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்காக ஒரு தொழிற்சாலையை உருவாக்கியுள்ளோம். அவர்களுக்கும் உதவ வேண்டும் என்று கூறியுள்ளோம்.”


இவ்வாறு அவர் பேசினார்.


அவருடன் அவரது கணவரும், தென்னிந்திய தறி நெசவுத்தொழிலாளர்கள் சங்கத் தலைவரும், பிரபல இயக்குநருமான ஆர்.கே.செல்வமணியும் உடனிருந்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண