முதன்முதலாக அறிவிக்கப்பட்டுள்ள சிவகாசிக்கு மாநகராட்சியில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் வாக்கு சேகரிக்கும் பிரச்சார கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டார். இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். சிவகாசியில் பல கோடி மதிப்பில் திட்டங்களை செயல்படுத்தி நிதி ஒதுக்கியவர் எடப்பாடி பழனிச்சாமி. அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெற வேண்டும். உண்மையைச் சொல்லி , அதிமுகவின் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரித்தாலே நாம் வெற்றி பெற்று விடுவோம்.
அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர். பட்டாசு தொழிலை பாதுகாத்தவர் பட்டாசு தொழிலுக்கு உயிர் கொடுத்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இன்றைய கொடூர நிலைமை மாறவேண்டும் என்றால் அதிமுகவிற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். யாரைக் கண்டும் ஓடி ஒளிய போவது கிடையாது பிரச்சனை என்றால் நான் ஓடோடி வருவேன்,’’ என ராஜேந்திரபாலாஜி பேசியதும், அங்கிருந்தவர்கள்அனைவரும் கரவொலி எழுப்பினர்.
மோசடி வழக்கில் கைதாகி ஜாமினில் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அரசியல் தொடர்பான பரபரப்பான கருத்துக்களை தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில் தான் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்திற்காக விருதுநகர் மாவட்டம் வருகை தந்திருந்தார்.
எடப்பாடி பழனிச்சாமி என்ன பேசுவார் என்பதை விட, முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி என்ன பேசுவார் என்கிற எதிர்பார்ப்பு தான் அதிகம் இருந்தது. அதன் படி ராஜேந்திரபாலாஜி தனது பரபரப்பான கருத்துக்களை இன்று வைத்தார். கைதாகாமல் 20 நாட்களாக தலைமறைவாக இருந்த அவர், இன்று தான் ஓடி ஒளியப்போவதில்லை என்று பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதே மேடையில் ராஜேந்திரபாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். கட்சியை உடைக்க தேடி தேடி வழக்கு பதிவு செய்யப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.
விருதுநகர் பிரச்சாரத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய முழு வீடியோ இதோ...
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்