சீர்காழியில் வாசிங் சோப்பு மற்றும் வாஷிங் பவுடர் விற்பனை செய்வது போல பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை அடித்து வந்த மூன்று பேரை வாட்சப் நிறுவத்தின் உதவியுடன் சீர்காழி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் கொள்ளை


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் கிராமத்தில் உள்ள கம்பன் நகரில் வசித்து வருபவர் 53 வயதான லட்சுமி. இவர் சேந்தங்குடியில் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனது உறவினர் வீட்டின் துக்க காரியத்திற்காக கடந்த 2023 -ஆம் ஆண்டு நவம்பர் 5 -ம் தேதி சென்றுள்ளார். அப்படியே துக்க நிகழ்வுகள் முடித்து நாதல்படுகையில் உள்ள தனது தம்பி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து மறுநாள் 6-ம் தேதி பள்ளிக்கு பணிக்கு சென்று வேலை முடிந்து மாலை வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.




வாட்சப் கால் மூலம் திருட்டு அரங்கேற்றம் 


அப்போது வீட்டிற்கு வந்த அவர் வீட்டின் முன்பக்க கிரில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே அறையில் இருந்த இரண்டு பீரோவை உடைத்து அதில் இருந்த 48 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் திருட்டு போனதை கண்டு லெட்சுமி அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சீர்காழி காவல் நிலையத்தில் ஆசிரியர் லட்சுமி புகார் அளித்தார். அந்த புகாரின் பெயரில் சீர்காழி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.




அதே பகுதியில் கம்பன் நகர் முதல் தெருவில் வசித்து வரும் சோமசுந்தரம் என்பவரது வீட்டில் செப்டம்பர் மாதம் வீட்டின் பூட்டை உடைத்து 9, பவுன் நகை திருடப்பட்டது. இதுகுறித்தும் சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள செல்போன் டவர், மற்றும் சிசிடிவி கேமரா மூலம் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். சிசிடிவி காட்சியில் தலைகவசம் அணிந்து இருப்பதால் ஆட்களை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது, செல்போன் கால்களை பயன்படுத்தாமல், வாட்சப் கால்களை பயன்படுத்தி திருட்டை அரங்கேற்றி வந்துள்ளனர்‌.




மூன்று பேர் கைது 


இதன் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கரூரை சேர்ந்த 26 வயதான மனோஜ் குமார் என்பவரை கைது செய்த தனிப்படை போலீசார் அவரிடம் இருந்த 13 சவரன் தங்க நகைகளை கைப்பற்றினர். தொடர்ந்து போலீசார் மனோஜ் குமாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர். முன்னதாக கடந்த மே மாதம் 14 -ஆம் தேதி இவ்வழக்கில் தொடர்புடைய சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்த 24 வயதான சதீஷ் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 5 பவுன் நகையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் லட்சுமி வீட்டில் திருடப்பட்ட நகைகளில்18 சவரன் நகைகளை பறிமுதல் செய்துள்ள போலீசார், மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய நபர்களை தேடி வந்தனர். அவரை விரைவில் பிடித்து மீதமுள்ள நகைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறையினர் தரப்பில் தகவல் தெரிவித்திருந்தனர்.




மூன்றாவது நபரிடம் 24 சவரன் மீட்பு 


இந்நிலையில் இதில் தொடர்புடைய புதுக்கோட்டை திருமலை ராஜன் சமுத்திரத்தை சேர்ந்த 42 வயதான ரமேஷ் குமார் கம்பன் நகரில் 2 வீடுகளிலும் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து காவல் ஆய்வாளர் புயல் பாலச்சந்திரன், தனிப்படை உதவி ஆய்வாளர் மணிகண்ட கணேஷ், தலைமையில் போலீசார் தீவிரமாக தேடிய நிலையில் முன்னதாக கைதாகிய சதீஷை நீதிமன்றத்தில் பார்க்க வந்த போது ரமேஷை கைது செய்து அவரிடம் இருந்து 23- 3/4 தங்க நகைகளை மீட்டு ரமேஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


உதவிய வாட்சப் நிறுவனம்


இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், சீர்காழி முழுவதும் தெரு தெருவாக துணி சோப்பு, வாஷிங் மிஷினுக்கான பவுடர் விற்பனை செய்வது போல பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாவும், சதீஷ் மற்றும் ரமேஷ் இருவரும் மாமனும், மச்சான் என்றும், வாட்சப் கால்களை பயன்படுத்தி இவர்கள் பேசிய நிலையில் வாட்சப் கால் வாய்ஸ் பதிவுகளை பெறுவதற்கு அமெரிக்க நாட்டின் துணையுடன் வாட்சப் நிறுவனத்தில் பேசி கால் பதிவுகளை பெற்று இவர்களை பிடித்ததாக தெரிவித்தனர்.