மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள புகழ்பெற்ற ஆன்மிகத் தலமான திருவெண்காட்டில், ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் தீர்த்தவாரி பெருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர்.

Continues below advertisement

தலப் பெருமையும் சிறப்புகளும்

திருவெண்காடு கிராமத்தில் அமைந்துள்ள பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் 11-வது தலமாகப் போற்றப்படுகிறது. காசிக்கு இணையான ஆறு ஸ்தலங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் இத்திருத்தலம், பல்வேறு ஆன்மிகச் சிறப்புகளைத் தன்னுள் கொண்டது. இங்கு சிவபெருமானின் உக்கிர வடிவமும், சிவ அவதாரங்களில் மிக முக்கியமானதுமான அகோர மூர்த்தி  தனிச் சன்னதியில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். 

அதேபோல், நவகிரகங்களில் கல்வி, அறிவு மற்றும் வியாபாரத்திற்கு அதிபதியான புதன் பகவான் இத்தலத்தில் தனி சன்னதியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அனுகிரகம் செய்கிறார். இதனால் இது புதன் பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. இக்கோவிலின் மற்றொரு பெரும் சிறப்பு, இங்கு அமைந்துள்ள முக்குளங்கள் ஆகும். அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என அழைக்கப்படும் இந்த மூன்று தீர்த்தக் குளங்களும் மருத்துவக் குணங்கள் மற்றும் ஆன்மிக அதிர்வுகள் நிறைந்தவையாகக் கருதப்படுகின்றன.

Continues below advertisement

அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம்

ஆனி மாத அமாவாசை தினமான இன்று, இத்திருக்கோவிலில் தீர்த்தவாரி நிகழ்வு வெகு விமரிசையாகத் தொடங்கியது. இதையொட்டி, காலை முதலே மூலவர் சுவேதாரண்யேஸ்வரர் மற்றும் பிரம்ம வித்யாம்பிகை அம்மனுக்கு சிறப்பு லட்சார்ச்சனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.இதனைத் தொடர்ந்து, அஸ்திர தேவரை தீர்த்தக் கரைக்குக் கொண்டு வந்து. அங்கு அஸ்திர தேவருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி மற்றும் விசேஷ மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் கண் கொள்ளாக் காட்சியாக நடைபெற்றன. பின்னர், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

முக்குள தீர்த்தவாரி

பின்னர் அஸ்திர தேவர் முறைப்படி கோவிலில் உள்ள அக்னி, சூரியன், மற்றும் சந்திர தீர்த்தம் ஆகிய மூன்று குளங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டார்.அஸ்திர தேவருக்கு அந்தந்த குளங்களின் கரைகளில் பூஜைகள் செய்யப்பட்டு, குளத்து நீரில் அஸ்திர தேவரை மூழ்கச் செய்து 'தீர்த்தம் அளிக்கும்' தீர்த்தவாரி நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெற்றது. இந்த ஆன்மிகப் பெருவிழாவிற்கான அனைத்து அர்ச்சனை மற்றும் தீர்த்தவாரி பூஜைகளையும் திருக்கோவில் அர்ச்சகர் ராஜப்பா குருக்கள் சாஸ்திர முறைப்படி, வேத மந்திரங்கள் முழங்க மிகச் சிறப்பாகச் செய்து வைத்தார்.

திரண்ட பக்தர்கள் கூட்டம்

ஆனி அமாவாசை மற்றும் தீர்த்தவாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவெண்காட்டில் குவிந்திருந்தனர். அஸ்திர தேவர் குளங்களில் தீர்த்தம் அளித்த அந்தப் புனிதமான தருணத்தில், குளக்கரைகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'நமச்சிவாய', 'அகோர மூர்த்திக்கு அரோகரா' என பக்தி கோஷங்களை எழுப்பியவாறு, முக்குளங்களிலும் புனித நீராடினர்.

அமாவாசை தினத்தில் இந்த முக்குளங்களில் நீராடி, சுவேதாரண்யேஸ்வரரையும், புதன் பகவானையும் வழிபட்டால் பித்ரு தோஷங்கள் நீங்கும், கல்வி ஞானம் பெருகும், தீராத நோய்கள் தீரும் என்பது ஐதீகம். புனித நீராடலுக்குப் பிறகு, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அகோர மூர்த்தியையும், புதன் பகவானையும் தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர்.